கஜா புயலால் டெல்டா மாவட்ட பகுதியில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தேங்காய் விலை ரூ.50 வரை உயரும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டன. மற்ற பயிர்களை போல் மீண்டும் ஆறு மாதங்களில் விளைவிக்கக்குடியது அல்ல தென்னை. ஒரு தென்னை மரம் வளர்க்கும் விவசாயிக்கு பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் கழித்தே பயன் கொடுக்கும். அந்த வகையில் தற்போது பலன் கொடுக்க ஆரம்பித்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு கஜா புயலால் வீழ்ந்துவிட்டதால் இனிவரும் நாட்களில் இளநீர், தேங்காய்கள் வரத்து குறைவாக இருக்கும்
எனவே தேங்காய் விலை கிடுகிடுவென உயரும் என்று அஞ்சப்படுகிறது. தஞ்சை, பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற பகுதியில் இருந்துதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன. கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் தேங்காய் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த 5 நாட்களில் 6 ரூபாய் தேங்காயின் விலை அதிகரித்து தற்போது ஒரு தேங்காய் ரூ.36 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலையுயர்வு மேலும் அதிகரித்து ஒரு தேங்காயின் விலை ரூ.50 வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.