2011ஆம் ஆண்டு பிறப்பதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு வழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"தமிழக சட்டப்பேரவை-தலைமைச் செயலக வளாகம் புதிய கட்டடத் திறப்பு விழா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா, தஞ்சை பெரியகோயில் 1000 ஆண்டு நிறைவு விழா, செம்மொழிப் பூங்கா தொடக்க விழா என தமிழர் வரலாற்றில் என்றும் நின்றுநிலவிடும் அரிய நிகழ்வுகளை வரலாற்றில் பதித்துவிட்ட பெருமிதத்தோடு 2010 நம்மிடம் விடைபெற, வரவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு கட்டியம் கூறியபடி 2011 நம்மை எதிர்நோக்குகிறது." என்று முதல்வர் மு.கர்ணாநிதி தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
"2011-ஆம் ஆண்டில் உண்மையான மக்களாட்சி மலர நாம் அனைவரும் இந்த புத்தாண்டு தினத்தன்று உறுதி ஏற்க வேண்டும் என்று தெரிவித்து, மீண்டும் ஒரு முறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்." என்று அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசும், ஊழல் சுயநல வெறியால் அதற்குத் துணைபோன தமிழக முதல்வரின் துரோகமும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இந்திய ஜனநாயகத்துக்கே இழிவுதரும் விதத்தில், நாட்டையே உலுக்கி உள்ள உலக மகா ஸ்பெக்ட்ரம் ஊழலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், பிரதான குற்றவாளியான தி.மு.க.வும் ஈடுபட்ட அக்கிரமத்தை, உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி மூலம், நாடெங்கும் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து விட்டது.
2011-ம் ஆண்டு, அரசியல் அரங்கத்தில் மகத்தான திருப்பங்களையும், மாற்றங்களையும் தருகின்ற ஆண்டாகவே அமையும் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று வைகோ தன் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.