வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை , புதன், 22 ஏப்ரல் 2009 (16:13 IST)
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரால் பலியாகி வரும் அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திட ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர் முதலமைச்சர் கருணாநிதி நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் அறிவித்துள்ள முழு வேலை நிறுத்த வேண்டுகோளை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்று அதில் பங்கேற்கிறது.இலங்கையில் அவதிக்குள்ளாகி வரும் அப்பாவித் தமிழர்களின் அவல நிலையைப் போக்கிடவும், அவர்களை பாதுகாத்திடவும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு சார்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் நேரில் வலியுறுத்தியும் அங்கு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உணவு, மருந்து, துணிமணிகள் மற்றும் மருத்துவக் குழுவினை அனுப்பியும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளோம்.என்றாலும் அங்கு நடைபெற்று வரும் போரால் அப்பாவி தமிழர்கள் பலியாகிறார்கள். படுகாயமடைந்த தமிழர்களை காப்பாற்றவும் வழியின்றி அல்லல்படுகிறார்கள்.எனவே அங்கு உடனடியாக போரை நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திடும் முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று நாளை வேலை நிறுத்தம் முழு வெற்றியைப் பெற தமிழகத்தின் அனைத்து காங்கிரஸ் சகோதர, சகோதரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் என்று தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.