சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை, மத்திய உள்துறை உடனடியாக ஏற்று உரிய ஆணைகளை வழங்கிட முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. 1931-ம் ஆண்டிற்கு பின்னர் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் உண்மை.
இந்த நிலையில் 1931-ம் ஆண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு விழுக்காட்டை மீண்டும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும், இது சமூக நீதி குறிக்கோளை அடைவதற்கு தேவையென்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இது காலத்தின் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 விழுக்காட ு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, முதலில் அச்சட்டத்திற்கு உச் ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அப்போது 1931-ம் ஆண்டுக்கு பின்னர் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காடி எந்த அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட உயர்வை கல்வி நிலையங்களில் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு அரசு வந்தது என்ற வினாவை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.
அந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் பா.ம.க. சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் மக்கள் தொகை கணக்கெடுப்பை இனி சாதி வாரியாக நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இது தொடர்பாக எத்தகைய அறிவுறுத்தலையும், ஆணையையும் பிறப்பிக்கவில்லை.
பொதுவாக, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான வழக்குகளில் மனுதாரர்கள் கேட்காத கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் பல்வேறு நீதிமன்றங்கள் விதித்து வந்திருக்கின்றன. மண்டல் கமிஷன் வழக்கில் மனுதாரர் சார்பில் கோரப்படாத ஒரு நிபந்தனையை உச்ச நீதிமன்றம் தானாகவே விதித்தது. கிரிமிலேயர் எனப்படும் அம்சத்தை நீதிமன்றம் தானாகவே வகுத்து அளித்திருக்கிறது. மேலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கும் மேல் இருக்க கூடாது என்ற உச்ச அளவும் இதே நடைமுறையில்தான் நீதிமன்றத்தால் புகுத்தப்பட்டது.
இப்படி சமூக நீதிக்கு பாதிப்பான காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக எந்த தீர்ப்பும் வரவில்லையே என்ற கவலையும், ஏக்கமும் சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றம் சமூக நீதி ஆர்வலர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
அந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரரின் பணி அமர்த்தல் தொடர்பான பிரச்சனை என்றாலும், சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை உணர்ந்து நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இருவரும் இடஒதுக்கீட்டு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக கிடைக்க சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க. நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கிறது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் இந்த அறிவுறுத்தலை மத்திய அரசின் உள்துறை உடனடியாக ஏற்றுக் கொண்டு உரிய ஆணைகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இட ஒதுக்கீட்டிலும், சமூக நீதியிலும் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும், தமிழக முதலமைச்சரும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.