Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவினையை தூண்டியதாக வைகோ, கண்ணப்பன் கைது!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (20:38 IST)
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்தும், பிரிவினையை தூண்டுமாறு பேசியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், அக்கட்சியின் மூத்த தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்குச் சென்ற தமிழக காவல் துறையி்ன் க்யூ பிரிவு காவலர்கள், பிரிவினை மற்றும் தேசத் துரோக குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வைகோ, காவல் துறை வாகனத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஈழத் தமிழர்களை காப்பாற்ற ஆயுதப் போராட்டத்தை துவக்கவேண்டும் என்ற தனது நிலையில் மாற்றம் ஏதும் இல்லையென்றும், ஈழத் தமிழர்களைக் கொல்ல சிறிலங்க அரசிற்கு ஆயுதங்களையும், ராடார்களையும் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி உதவியுள்ளார் என்ற தனது குற்றச்சாற்றில் மாற்றமில்லை என்றும் கூறினார்.

சிறிலங்க இராணுவத்திற்கு உதவியதன் மூலமும், உளவுத் தகவல்களை பகிர்ந்துகொண்டதன் மூலமும் தமிழர்களுக்கு மன்மோகன் சிங் அரசு துரோகம் இழைத்துவிட்டது என்றும் வைகோ குற்றம் சாற்றினார்.

வைகோ கைது செய்யப்பட்ட சில நிமிட இடைவெளியில் பொள்ளாச்சியில் மு.கண்ணப்பனும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மீது இந்திய தண்டனைவியல் சட்டப் பிரிவு 124ஏ (பிரிவினை இயக்கத்தை ஆதரிப்பது), சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவு 13 (1) (டி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வைகோ, சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி இரவி முன்னிறுத்தப்பட்டார். அவரை நவம்பர் 6ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தவிட்டதையடுத்து, வைகோ புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

சென்னையிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் 'இலங்கையில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் நேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் கூட்டங்களை நடத்தியது.

சென்னைக் கூட்டத்தில் வைகோவும், கோவைக் கூட்டத்தில் கண்ணப்பனும் பேசியதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வைகோ மீது தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக் குழு நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. அது அளித்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments