இது தொடர்பாக அவர ் வெளியிட்டுள்ள அறிக்க ையில், " திருவள்ளூர் மாவட்டம், கத்திவாக்கம் நகராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார். சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வருமானம் உள்ள இந்த நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளில் 200- க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், நகராட்சித் தலைவரின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், நகராட்சி ஆணையருக்கும், நகராட்சித் தலைவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவும் இதுவரை ஒரு வேலை கூட நடைபெறவில்லை.
கருத்து வேறுபாட்டைக் களைந்து மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நகராட்சி ஆணையரை மிரட்டும் பணியில் தி.மு.க. நகராட்சித் தலைவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
அ.இ. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், தாழங்குப்பத்தைச் சார்ந்த 468 மீனவக் குடும்பங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மின்சார வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்காமல், அவசரக் கோலத்தில் மீன் வளத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று வரை மீனவ மக்கள் யாரும் அங்கு குடியேறவில்லை.
இதே போன்று, ஐந்து கிராமத்திற்கு நடுவில் அமைந்துள்ள தாமரைக்குளத்தைத் தூர் வாரி, தடுப்புச்சுவர் அமைக்க ரூ.33 லட்சமும், பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற டுபிட்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.15 கோடியும், தாழங்குப்பம் பிரதான சாலையில் இருந்து வடசென்னை வரை ஆற்றுப் பாலம் அமைக்க ரு.20 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டன.
ஆனால், அனைத்துப் பணிகளையும் கத்திவாக்கம் நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. மேலும் இந்நகர மக்களின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க டுபிட்கோ மூலம் ரூ.6 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டும் இதற்கான பணிகள் ஆமை வேகத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நகராட்சி நிர்வாகம் தற்போது செயலிழந்து காணப்படுகிறது. மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை செய்யாமல் தொடர்ந்து மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கத்திவாக்கம் அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், கத்திவாக்கம் நகராட்சித் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.