இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க இராணுவ நடவடிக்கைகளும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இலங்கைத் தமிழர் பிரச்சனை தீவிரமடைந்துவரும் நிலையில், அப்பிரச்சனையில் தி.மு.க.வின் நிலை குறித்து விளக்க சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி, தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்குமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கோரி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தான் எழுதிய கடிதத்திற்கு பயனில்லாமல் போகவில்லை என்று கூறிய கருணாநிதி, தன்னிடம் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமரிடம் இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை தான் அவருக்கு எடுத்துரைத்ததாகக் கூறினார்.
“எப்படியெல்லாம் தமிழர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவின் தலையீடு இருந்தும்கூட, அப்படி இருந்ததாகவே அவர்கள் எண்ணவில்லை. அதை அலட்சியப்படுத்திவிட்டு நடக்கிறார்கள். தினம் தினம் எங்கள் செவிகளில் விழுகின்ற செய்திகள் எங்களை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. எங்களால் தமிழகத்தில் தொடர்ந்து இனி வாழ முடியுமா? என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாள்தோறும் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று மன்மோகன் சிங்கிடம் சொன்னேன். அவர்கள் கவலைப்படவேண்டாம், நான் உறுதியாகச் சொல்கிறேன், என்னை நம்புங்கள் என்று இந்தியப் பிரதமர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்த உடனேதான் நான் அவரிடம் எங்களுடைய கோரிக்கைகளை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று சொன்னேன். என்ன கோரிக்கைகள் என்று கேட்டார். ஒவ்வொரு கோரிக்கையாக அவருக்குப் படித்துக் காட்டினேன ்” என்று கூறிய கருணாநிதி தான் முன்வைத்த கோரிக்கைகளை படித்துக்காட்டினார்.
1. புதுடெல்லியிலே உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
2. இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
3. இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கிடவேண்டும்.
4. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துயரத்திற்கும் இனி ஆளாகக் கூடாது என்றுதான் எடுத்துக்கூறியபோது மிகுந்த அக்கறையுடனும், கவலையுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டு, “நான் உடனடியாக கவனக்கிறேன் , என்னை நம்புங்கள ் ” என்று அவர் கூறிய வார்த்தைகள் தனக்கு ஆறுதலாக இருந்தது என்று கருணாநிதி கூறினார்.
இந்திய அரசு எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்!
ஒருவேளை அவராலேயே நிறைவேற்றப்பட முடியாமல் போகுமானால், நம்முடைய இனத்தமிழர்களை ஒழித்துத்தான் தீருவோம் என்று இலங்கை அரசு கச்சை கட்டிக்கொண்டு இந்தப் போரிலே ஈடுபடுமானால் தமிழர்கள் கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படும்போது இந்திய அரசு எங்களுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.
அவர்கள் உறுதியளித்தது மாத்திரம் அல்ல, உடனடியாக தேச பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரச்சொல்லி அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலிருந்து அபயக் குரல் வந்திருக்கிறது. கண்டனக் குரல் வந்திருக்கிறது. தி.மு.க. எதிர்ப்பைக் காட்டியுள்ளது. தமிழர்கள் தங்கள் கவலையை தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் எங்கள் துயரத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையை இந்திய அரசு தெரிவித்துள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறத ு ” என்று கருணாநிதி கூறினார்.
இந்த அரசு தேவையா?
“இந்த உறுதி மீறப்பட்டால் அதற்குப் பிறகு நாங்கள் இந்த அரசு எங்களுக்குத் தேவையா என்கின்ற அந்த கேள்விக்கு விடைகண்டாக வேண்டும் என்பதை பவ்வியமாக, அடக்கமாக, அமைதியாக அதே நேரத்தில் நான் தமிழன், தமிழ்நாட்டு மக்களை ஆண்டுக் கொண்டிருக்கும் ஒரு தமிழன், தமிழ்நாட்டு மக்களுக்கு காவலனாக நியமிக்கப்பட்ட ஒரு காவலன். அந்தத் தமிழன் இங்கே செத்தால் என்ன? இலங்கையிலே செத்தால் என்ன? எங்கே செத்தாலும் அவன் தமிழன்தான். எனவே தமிழனை காப்பாற்ற நாங்கள் நடத்துகிற போராட்டத்தில் இந்திய அரசு எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறைகூவல் விடுக்கிறேன ்” என்று கருணாநிதி பேசினார்.