"2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டேன் என்றும் தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, ஐந்து ஆண்டுகளாக எனது ஆட்சியில் தங்கு தடையின்றி வழங்கப்பட்ட மின்சாரம், ஏன் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தடைபட ஆரம்பித்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி, `முன்பிருந்த ஐந்தாண்டுக் காலத்தில் மின் உற்பத்தியை பெருக்குவதற்காக பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாத காரணத்தால் மின் பற்றாக்குறையின் விளைவுகளை இப்போது நாங்கள் சமாளிக்க நேரிட்டுள்ளது' என்று திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
1991 முதல் 1996 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை நடைபெற்ற எனது ஆட்சிக் காலத்தில் 3430.75 மெகாவாட் அளவிற்குப் புதிதாக மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டது என்றும், தற்போதுள்ள மொத்த மின் நிறுவு திறனில் எனது ஆட்சிக் காலத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மின் நிறுவு திறன் உருவாக்கப்பட்டது என்றும் நான் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
இது மட்டும் அல்லாமல், எனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக, மத்திய அரசின் தேசிய விருதுகள் தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்தது.
1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் கவனம் செலுத்திய காரணத்தினால் தான் இடையில் வந்த ஆட்சிகள் மின்சாரப் பிரச்சினையை சமாளிக்க முடிந்தது என்று கூறி இருக்கிறார். தி.மு.க. முந்தைய ஆட்சிக் காலத்திலும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நிலவியதை மறந்துவிட்டாரா? என்று தெரியவில்லை. இவருடைய 1996 முதல் 2001 வரையிலான ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மின் நிறுவு திறன் 560.69 மெகாவாட் மட்டுமே.
இவ்வளவு குறைவாக தி.மு.க. ஆட்சியில் மின்சார பற்றாக்குறை நிலவிய போதும், 2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன். தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. ஐந்து ஆண்டுகளாக எனது ஆட்சியில் தங்கு தடையின்றி வழங்கப்பட்ட மின்சாரம், ஏன் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தடைபட ஆரம்பித்தது? இதற்குக் அவரின் விளக்கம் என்ன?
முறையான பராமரிப்பின்மையால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல்மின் நிலையங்களான எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை ஆகியவை மாறி மாறி பழுதடைகின்றன. இதன் மூலம் மட்டும் 700 முதல் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி குறைகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள ஒரு ய ூனிட் இரண்டு மாதமாக இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதே போல், மத்திய அரசு நமக்குத் தர வேண்டிய பங்கை 1,000 மெகாவாட் அளவுக்குக் குறைத்துவிட்டது. இதை மத்திய அரசிடமிருந்து கேட்டு வாங்க முடியாதா? மேலும், அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான 25 விழுக்காடு நிலக்கரியை மத்திய அரசு தற்போது குறைத்திருக்கிறது. இதன் விளைவாக, மேற்படி 25 விழுக்காடு நிலக்கரியை மத்திய அரசு நிறுவனம் மூலம் தனியாரிடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்று வருகிறது. தனியாரிடமிருந்து பெறப்படும் நிலக்கரி தரமற்றதாக இருப்பதன் காரணமாகவும், மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இது தவிர, மத்திய அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அளிக்க வேண்டிய வாயு அளவை நாள் ஒன்றுக்கு சுமார் 4,50,000 கனமீட்டர் அளவுக்குக் குறைத்துவிட்டது. அதே சமயத்தில், ஆதாயம் கருதி தனி நபர்களுக்கு வாயு ஒதுக்கீடு மத்திய அரசால் செய்யப்பட்டு வருகிறது. எனது ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு வாயு ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை தரப்பட்டபோது நான் அதை எதிர்த்தேன்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களான, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை; அனல் மின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமை; மத்திய அரசு தமிழகத்திற்குத் தர வேண்டிய நிலக்கரியையும், வாயுவையும் குறைத்தது ஆகியவை குறித்த உண்மை நிலையை தெரிவிக்காமல், முந்தைய அ.இ. அ.தி.மு.க அரசின் மீது பழிபோடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மின்சாரப் பற்றாக்குறை குறித்த உண்மை நிலவரங்களை தெரிவிக்க மனமில்லாமல், தன் சுயநலம் கருதி எனது அரசின் மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார். எனது ஆட்சிக் காலத்தையும், தற்போதைய தி.மு.க. அரசின் ஆட்சிக் காலத்தையும் மக்கள் எடைபோட ஆரம்பித்துவிட்டார்கள ்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.