பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மீண்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி, தொழில் வளம் என அனைத்து வளங்களும் குன்றிப் போயுள்ளன.
மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லை.
சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரீமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர். கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 35 டாலர் அளவுக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இது போன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது போன்ற முயற்சிகளில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டால், இது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும். இதன் விளைவாக பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான்.
பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி மக்களுக்குக் கிடைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மறைமுகமாக உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.