Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை: கருணா‌நி‌தி ப‌திலடி!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (13:27 IST)
த‌மிழக அர‌சி‌ன் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌ப் பெ‌ட்டி வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாக அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல் ‌சி‌றிது‌‌ம் உ‌ண்மை‌யி‌ல்லை எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் மு.கருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து இ‌ன்று அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஏழை எ‌ளிய மக்களுக்கு வழங்குவதால் மக்களிடம் தி.மு.க. அரசின்பால் பெருகிவரும் ஆதரவினை எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றே இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்த அளவிற்கு ஆத்திரம்.

அறிக்கையில் தொடக்கத்தையே திருக்குறளில் ஆரம்பித்திருக்கிறார். காலம் எந்த அளவுக்கு கெட்டுக்கிடக்கிறது பாருங்கள். ஜெயலலிதாவுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம ்? அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளை உதாரணத்திற்கு அவர் பயன்படுத்தி அறிக்கையைத் தொடங்குகிறார்.

அந்தக் குறள்.

" இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு'' என்பது தான்.

இதைக் கூட அறிக்கையில் சரியாக எழுதாமல் "வல்ல அரசு'' என்று எழுதியிருக்கிறார். பரவாயில்லை. அதற்குப் பொருள் கூறும்போது கூட, "வழிவகுப்பது, சேர்ப்பது, காப்பது, பாதுகாப்பதை சரியாகப் பிரித்துச் செலவழிப்பது இவைகளில் வல்லவன் அரசன் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை'' என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருக்கிறார். இதுவும் தவறு. வள்ளுவர் சொல்லியிருப்பது ஒரு அரசுக்குரிய இலக்கணத்தைத் தானே தவிர, அரசனுக்கு என்று வள்ளுவர் இதைக் கூறவில்லை.

வள்ளுவர் வாக்குப்படி நான் நடந்து கொள்ளவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினை என்பால் சுட்டிக்காட்டுகிறார். திருவள்ளுவர் இந்த ஒரு குறளை மட்டும் எழுதவில்லை. கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள,

" கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து'' என்றும்,

" வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு'' என்றும்,

ஜெயலலிதாவிற்காகவே எழுதப்பட்டுள்ள குறட்பாக்களையும், அவருக்கு அறிக்கை எழுதிக்கொடுத்து புலவர் மூலமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறைந்த சீனிவாசன் இந்த அம்மையாரின் ஆட்சி அலங்கோலம் பற்றி அவரது தீர்ப்பிலேயே குறிப்பிட்டது வள்ளுவன் பெருமானின் குறளை மேற்கொள்காட்டித் தான்.

" நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்''

என்று நீதியரசர் ஒருவராலேயே சுட்டிக் காட்டப்பட்ட ஜெயலலிதா, என் மீது குற்றஞ்சாட்டி கூச்சலிட்டிருப்பது தான் விந்தையிலும் விந்தை.

அது போகட்டும். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு வருகிறேன். அவற்றில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

2006- ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "கலர் டி.வி. இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு கலர் டி.வி. வழங்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டதாகவும், 2007-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் "தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்'' என்று கூறப்பட்டதாகவும், தற்போது "எல்லா குடும்பங்களுக்கும் இலவச கலர் டி.வி.'' என்று சொல்லப்படுவதாகவும் இதில் மாபெரும் முரண்பாடு உள்ளது என்றும் ஜெயலலிதா கூறுகிறார்.

தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று வாசகங்களிலே ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் கூற வேண்டும். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவோம் என்று சொல்லிவிட்டு, தற்போது வழங்க மாட்டோம் என்று சொன்னால் தான் முரண்பாடு. வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கும்போது அதற்குள்ள வரவேற்பினைப் பொறுத்து, மக்கள் ஆதரவைப் பொறுத்து மேலும் மேலும் அந்தத் திட்டத்தில் முன்னேற்றம் செய்வது ஒன்றும் முரண்பாடு ஆகாது என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது அதே அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதைப் போல, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதை நிறுத்தினால்தான் அது முரண்பாடு. எனவே முரண்பாடான கருத்தினைத் தெரிவிப்பவர் ஜெயலலிதாதானே தவிர, தமிழ்நாடு அரசல்ல.

ஜெயலலிதா தனது அறிக்கையில் அடுத்த முக்கிய குற்றச்சாட்டாகக் கூறியிருப்பது இதற்காக தொகை ஒதுக்கப்பட்டது பற்றியதாகும். ஒதுக்கப்பட்ட தொகையில் மிச்சத் தொகை என்னவாயிற்று என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அவர் பல ஆண்டு காலம் தமிழகத்திலே முதலமைச்சராக இருந்தவர். அரசு கணக்கு விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்.

ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டால், அந்தத் தொகை முழுவதையும் பையிலே போட்டுத் தூக்கிக் கொண்டு கடைக்குப் போய், வாங்கிக்கொண்டு, மீதம் உள்ளதை அப்படியே வீட்டிற்குக் கொண்டு போய் விடுவதல்ல. ஒரு திட்டத்திற்கான மதிப்பீட்டைச் செய்து, அதற்கான நிதியை ஒதுக்கினால், அந்தத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டது போக மீதித் தொகை அரசு கணக்கிலேதான் இருக்குமே தவிர, அது எங்கும் போய் விடாது. அரசின் ஒவ்வொரு பைசா செலவிற்கும் மத்திய அரசின் சார்பில் தணிக்கை உண்டு. சிறு தவறு ஏற்பட்டாலும் அந்த தவறு அந்த தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படும். அந்த தணிக்கை அறிக்கை சட்டப் பேரவையிலே வைக்கப்படும்.

அப்படி வைக்கப்பட்டு, அதிலே ஏதாவது குறை கூறப்பட்டிருந்தால் ஜெயலலிதா அதனை எடுத்துக் கூறலாம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற முறையற்ற செலவுகள் குறித்து தணிக்கை அறிக்கையில் குறைகள் கூறப்பட்டு, அது பல ஏடுகளில் பல நேரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஜெயலலிதா அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க முடியாது.

இரண்டாவது கட்டமாக 750 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் 685 கோடி ரூபாய் என்று உள்ளது. இது முரண்பாடல்லவா என்கிறார் ஜெயலலிதா. திட்டம் வகுக்கப்பட்ட போது எதிர்பார்த்த மதிப்பு 750 கோடி ரூபாய். ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, அதில் தொலைக்காட்சி பெட்டியின் விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்ட போது தேவையான 685 கோடி ரூபாய் போக மீதம் உள்ள 65 கோடியை யாரும் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை. அத்தொகை அரசுக் கணக்கிலேதான் சேர்ந்துள்ளது.

மூன்றாவது கட்டமாக ஒப்பந்த புள்ளிகள் கோரியபோது, குறைந்த விலையை நிர்ணயித்த தொலைக்காட்சி பெட்டியின் விலைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரிய மற்றவர்களும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்களா என்றெல்லாம் விசாரணை நடத்தி அப்படிக் கொடுக்க முன்வந்தவர்களிடமும் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளிதாரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போது விலை குறைக்கப்பட்ட காரணத்தினால் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மீதம் இருந்த காரணத்தினால் அந்த தொகைக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டது.

அதனால் முதலில் திட்டமிட்டது 30 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் என்பதற்கு மாறாக தற்போது 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிட ஆணையிடப்பட்டு உள்ளதாக முரசொலியில் 27.12.2007 அன்று எழுதிய எனது கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன்.

அதை முழுவதும் படிக்காமல் அரைகுறையாக படித்துவிட்டு, அறிக்கை எழுதிக் கொடுத்தவரை நம்பி ஜெயலலிதா அறிக்கையிலே கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது அறிக்கை எவ்வளவு தவறு என்பதை புரிந்து கொண்டுதான் பெரும்பான்மையான பத்திரிகைகள் அவரது அறிக்கையை முழுவதும் வெளியிடாமல் அரைகுறையாக வெளியிட்டுள்ளன.

எனவே ஆத்திரத்தில் அவசரப்பட்டு அறிக்கை என்ற பெயரால் ஜெயலலிதா எழுப்புகின்ற குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments