Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்க அரசின் விளக்கம் திருப்தியளிக்கிறது: பிரணாப் முகர்ஜி

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (20:38 IST)
PIB
இலங்கைத் தீவில் நிகழ்ந்துவரும் போர் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த ‘விரிவான விளக்கங்கள ் ’ தனக்கு திருப்தியளிப்பதாக உள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று காலை கொழும்பு சென்ற அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவையும், அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லகாமாவையும் சந்தித்துப் பேசினார்.

இலங்கைப் பயணம் தொடர்பாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையை இந்திய அயலுறவு அமைச்சகம் தலைநகர் டெல்லியில் இன்று வெளியிட்டது.

பிரணாப் முகர்ஜியும், அதிபர் ராஜபக்சவும் நடத்திய சந்திப்பில் இலங்கைத் தீவில் சமீப காலங்களில் ஏற்பட்டுவரும் நிகழ்வுகள், இந்திய-சிறிலங்க உறவு, தெற்காசிய மண்டலத்தில் இருநாடுகளின் பரஸ்பர நலன் ஆகியன தொடர்பாக விவாதித்தனர் என்றும், இது தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த விரிவான விளக்கங்கள் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு திருப்தியளித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய-சிறிலங்க உறவுகள் வலிமையாக மேம்பட்டு வருவதாகவும், அந்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவரும் இந்தத் தருவாயில் இரு நாடுகளுக்கு இடையிலான அந்த உறவு மேலும் வலுவடைவது முக்கியமானது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

“23 ஆண்டுகளாக நடந்த மோதலில் பெற்ற இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு அரசியல் வாய்ப்பை அளித்துள்ளதாக நான் வலியுறுத்தினேன். தனது எண்ணமும் அதுதான் என்று அதிபர் (ராஜபக்ச) கூறினார். சிறிலங்க அரசுடன் இணைந்து, போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இயல்பு வாழ்வைப் பெற விரைந்து பணியாற்றுவோம ்” என்று கூறி பிரணாப் முகர்ஜி விடுத்த தனி அறிக்கையையும் அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போரினால் அதிகம் சீரழிந்த வடக்குப் பகுதியின் மறுகட்டமைப்பிற்கும், அங்கு உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் கொழும்புவுடன் இணைந்து புதுடெல்லி பணியாற்றும் என்று கூறியுள்ள அயலுறவு அமைச்சக அறிக்கை, “இப்பகுதியின் (வடக்கு) மறுசீரமைப்பிற்கும், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை உருவாக்கவும் நான் இணைந்து பணியாற்றுவோம். திரிகோணமலையில் 500 மெகா வாட் அனல் மின் நிலையம் ஒன்றை இந்தியாவின் தேச அனல் மின் கழகம் ( NTPC) நிறுவி வருவது குறித்து நான் பெருமையடைகிறேன ்” என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய- சிறிலங்கா இடையே 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட (இராஜீவ்-ஜெயவர்த்தனே) ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது அரசமைப்புத் திருத்தத்தினை வேகமாக தனது அரசு செயல்படுத்தும் என்று அதிபர் ராஜபக்ச உறுதியளித்ததாகவும், அதனையும் தாண்டி அதிகாரப் பகிர்வை அதிகரிப்பது குறித்த சாத்தியக் கூறுகளை தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாகத் தங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதிகளை முழுமையாக மதித்து நடப்பதாகவும், போர் நடந்த பகுதிகளில் உள்ள மக்களை தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் நேரில் வந்து பார்த்து நிலைமைகளை புரிந்து கொள்ள தான் அழைப்பு விடுப்பதாகவும் அதிபர் ராஜபக்ச தெரிவித்ததாக பிரணாப் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான ஜனநாயக வாழ்வை உருவாக்குவது அங்கு அமைதியையும், நிலைத்தன்மையையும் உருவாக்க உதவும் என்றும், இந்த இலக்கை நோக்கி பணியாற்ற முன்வரும் அனைவருடனும் இந்தியா இணைந்து பணியாற்றும் என்றும் அயலுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments