நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகளை (எஸ்கலேட்டர்) ஏற்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் அதிக சுமைகளுடன் ரயில் நிலையங்களுக்கு வருவோர் மற்றும் வயதானவர்கள் பயன்பெறுவார்கள்.
ஏ அந்தஸ்து கொண்ட 100 ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைப்பதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வயதானவர்கள் மட்டுமின்றி ஊனமுற்றோருக்கும் இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையங்களில் சுமை தூக்குவோராக (போர்ட்டர்கள்) இருந்த ஆயிரக்கணக்கானோர் கேங் மேன்களாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள், வயதான பயணிகள், ஊனமுற்றோர் ரயில்களில் சென்று ஏறுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு நகரும் படிகளை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
தவிர புதுடெல்லி, மும்பை, ஹவுரா போன்ற இடங்களில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான சுமைதூக்குவோரும் அதிகளவில் பணம் கேட்பதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
விமான நிலையங்களில் உள்ளது போல ரயில் பயணிகளின் வசதிக்காக சுமைகளை எடுத்துச் செல்வதற்கு டிராலிகளை அமைப்பது குறித்தும் ரயில்வே துறை பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அதற்கான முடிவு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
புதுடெல்லி, மும்பை, விஜயவாடா போன்ற குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்போது நகரும் படிக்கட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
தவிர மேலும் சில ரயில்வே கோட்டங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக மின்தூக்கிகளை (லிப்ட்) ஏற்படுத்துவது குறித்தும் அனுமதியை கோரப்பட்டிருப்பதாக தெரிகிறது.