காங்கிரஸ் கட்சித் தலைமை குறித்து அவதூறு பரப்பியதற்காக மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநில முதல்வர் பதவிக்கு அசோக் சவான் தேர்வு செய்யப்பட்டதை அடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய ரானே, கட்சித் தலைமை பாரபட்சமாகச் செயல்படுவதால்தான் தனக்கு பதவியளிக்கப்படவில்லை என்று குற்றம்சாற்றினார்.
இதுகுறித்துப் பரிசீலித்த காங்கிரஸ் தலைமை, அவதூறு பரப்பிய குற்றத்திற்காக ரானேவைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்க முடிவு செய்துள்ளது என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனா அமைப்பில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த நாராயண் ரானே தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று பல முறை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.