மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் சவான் நியமிக்கப்பட உள்ளார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று விலாஸ்ராவ் தேஷ்முக் (காங்கிரஸ்) தனது முதல்வர் பதிவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக அசோக் சவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த தலைவர் எஸ்.பி.சவானின் மகனான அசோக் சவான் (வயது 50), காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றத் தலைவர் என்ற முறையில் முதல்வர் பதவிக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மராட்டியத்தின் புதிய முதல்வர் யார் என்ற வரிசையில், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, பிரித்விராஜ் சவான் ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.