சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையால் தங்களுக்கு வரவேண்டிய நீரின் அளவு குறைந்து விட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ள குற்றச்சாற்று ஆதாரமற்றது என்று அந்நாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய உயர் மட்டக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
பாகிஸ்தானில் சீனாப் நதி பாயும் மராலா உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்த, இந்திய நீர்வள ஆணையர் ஜி. ரங்கநாதன் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் தங்கள் அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
ஜம்முவில் தோடா மாவட்டத்தில் சந்திரகோட் அருகே சீனாப் நதியின் மீது 450 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க பக்ளிஹார் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் மின் நிலைய அணையில் இந்தியா தண்ணீர் தேக்கிவருவதால், சீனாப் நதியில் தங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பெரும் பாதி்ப்பிற்குள்ளாகி வருகிறது என்று கூறியுள்ள பாகிஸ்தான், தங்களுக்கு நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள பாகிஸ்தான், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ரூபாய் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய நீர்வள ஆணையர் ஜி. ரங்கநாதன் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் நவம்பர் 29 முதல் மூன்று நாட்கள் பாகிஸ்தானில் சீனாப் நதி பாயும் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், பாகிஸ்தான் கூறியுள்ள குற்றச்சாற்றுகள் ஆதாரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிக்கையை உயர் மட்டக் குழுவினர் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.