மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை உடனடியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் மிகுந்த பரபரப்புடன் இயங்கும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மறைவான இடங்களில் 2 கிலோ எடையுள்ள இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை உடனடியாக வெடிகுண்டு வல்லுநர்களின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுகள் இரண்டும் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தால் தயாரிக்கப்பட்டவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதைக் காவல் துறையினர் உறுதி செய்யவில்லை.
மும்பையில் நவம்பர் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு, தாஜ் நட்சத்திர விடுதி, நாரிமேன் குடியிருப்பு ஆகிய இடங்களில் ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.