Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வன்னி அவலம்: நடேசனுடன் எரிக் சோல்‌ஹ‌ீம் பேச்சு!

வன்னி அவலம்: நடேசனுடன் எரிக் சோல்‌ஹ‌ீம் பேச்சு!
, வியாழன், 2 ஏப்ரல் 2009 (14:39 IST)
சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலால் வன்னி மக்கள் அனுபவித்துவரும் அவலம் குறித்து நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹ‌ீ‌ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியர் பிரிவுப் பொறுப்பாளர் ப. நடேசனுடன் பேசியுள்ளார்.

இத்தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் இயக்குனர் புலித்தேவன், புதன் கிழமை தொலைபேசி வாயிலாக நடந்த இந்த பேச்சு 30 நிமிடம் நீடித்ததெனவும், அப்போது வன்னி மக்கள் சந்தித்துவரும் மனிதப் பேரவலத்தை நடேசன் அவரிடம் விளக்கியதாகவும் கூறியுள்ளார்.

சிறிலங்கப் படைகளின் தொடர் தாக்குதலால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பன்னாட்டு அரசுகளின் கவலையை நடேசனிடன் எடுத்துரைத்த எரிக் சோல்ஹ‌ீம், இது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் செய்யப்பட்ட விளக்கத்தையும் விவரித்துள்ளார்.

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப் படுகொலை எப்படியெல்லாம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை விளக்கிய நடேசன், பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் ஒரு சிறிய பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள மக்கள் மீது ஒவ்வொரு நாளும் அரசுப் படைகள் நடத்தும் எறிகணைத் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு ஆகியவற்றில் குழந்தைகளும், சிறுவர்களும், கர்ப்பினிப் பெண்களும் ஈவிறக்கமின்றி நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்க அரசு மேற்கொண்டுவரும் இந்தத் திட்டமிட்ட இனப் படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் பன்னாட்டுச் சமூகத்திற்கு உள்ளது என்பதை வலியுறுத்திய நடேசன், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக உள்ளதாவும், இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த தீர்வு காண ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொடர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“தங்களை இனப் படுகொலை செய்து வரும் சிறிலங்க அரசிற்கு அடிமைப்பட தமிழ் மக்கள் விரும்பவில்லை. தமிழர்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையின் அடிப்படையிலான அவர்களின் அபிலாஷைகளை பன்னாட்டுச் சமூகம் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். அதற்கு மாறாக, சிறிலங்க அரசின் மரணப் பிடிக்குள் தள்ளும் எந்த நிபந்தனைகளையும் தமிழ் மக்கள் மீது திணிக்கக் கூடாது” என்று எரிக் சோல்ஹ‌ீமிடம் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தெளிவுபடுத்தியுள்ளார் என புலித்தேவன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil