இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆஸ்ட்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் முகமது ஹனீஃப் மீது போதிய ஆதாரங்கள் இன்றி குற்றம் சுமத்தப்பட்டதாக சிறப்பு விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது.
எனவே ஹனீஃப் விடயத்தில் ஆஸ்ட்ரேலிய அரசு தவறு செய்துள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் கிளார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
எனினும், ஹனீஃப்பை கைது செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மீது அந்நாட்டு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை புலனாய்வு அமைப்புகளிடம் ஆஸ்ட்ரேலிய அரசு வழங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹனீஃப் கைது தொடர்பாக விசாரணை நடத்திய ஜான் கிளார்க் தலைமையிலான குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டன், கிளாஸ்கோ குண்டுவெடிப்புகளில் ஹனீஃப்புக்கு தொடர்பிருப்பதற்கு அதிகாரிகள் மட்டத்தில் அல்லது உயர்மட்டத்தில் எந்தவித ஆதாரங்களும் இல்லை எனக் கூறியுள்ளது.
இதற்கிடையில் அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் ராபர்ட் மெக்லில்லாண்ட் இதுபற்றிக் கூறுகையில், அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாதது. எனினும், அரசின் அனைத்து புலனாய்வு அமைப்பின் தலைமை மீதும் தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சுதந்திரமாக பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி ஜான் கிளார்க் தலைமையிலான குழு தனது அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்வதாகவும் ஜெனரல் ராபர்ட் கூறினார்.
இங்கிலாந்தின் கிளாஸ்கோ மற்றும் லண்டன் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீஃபை கடந்த 2007 ஜூலை 2ஆம் தேதியன்று ஆஸ்ட்ரேலிய பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அந்நாட்டு உளவு நிறுவனம் நடத்திய விசாரணையில், முகமது ஹனீஃப் ஆஸ்ட்ரேலியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் தரவில்ல ை, அவர்மீது தவறாக பயங்கரவாத குற்றச்சாற்றுக்கள் சுமத்தப்பட்டுள்ளது என தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் திட்டத்துடன் முகமது ஹனீஃப் தொடர்புபடுத்தப்பட்டது எப்படி என்றும ், அவருக்கு எதிராகக் குற்றச்சாற்றுக்கள் திருப்பப்பட்டது எப்படி என்றும் விசாரித்து வந்த நீதிபதி ஜான் கிளார்க் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.