அமெரிக்காவின் 44வது அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அவர் அந்நாட்டு அதிபராக முறைப்படி பொறுப்பேற்கிறார்.
PTI Photo
FILE
அந்நாட்டில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் (எலக்டோரல் காலேஜ்), இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 488 தொகுதிகளில் பராக் ஒபாமா 333 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். குடியரசுக் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் ஃபுளோரிடா, ஓஹையோ, கலிபோர்னியா ஆகிய முக்கிய இடங்களில் ஒபாமா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கெய்ன் 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இன்னும் 50 தொகுதிகளின் வாக்கு முடிவுகள் வெளியாக உள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது என்பதால், அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தோல்வியுற்ற ஜான் மெக்கெய்ன், வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மெக்கெய்ன் பாராட்டு: மெக்கெய்ன் சற்று முன்னர் ஆற்றிய உரையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக நடந்த பரபரப்பான பிரசாரத்திற்கிடையே இருவரும் கடுமையாகப் போட்டியிட்டாலும் அது நாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் அமெரிக்காவிற்காகவே.
இத்தேர்தலில் வென்றதன் மூலம் தனக்கும், அமெரிக்காவுக்கும் ஒபாமா ஒருசேர புகழ் சேர்த்துள்ளார். அமெரிக்கா சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மெக்கெய்ன் கூறினார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா, அடுத்த சில நிமிடங்களில் சிகாகோ கிரான் பார்க் ஹாலில் உரையாற்ற உள்ளார். அதனைக் காண அங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
அதிக வாக்குகள் பதிவு: அமெரிக்காவில் கடந்த 1960ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிற்குப் பின்னர் அதிக வாக்குகள் பதிவானது தற்போதைய தேர்தலில்தான் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.