நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.
அவர் அந்த நூலில் எழுதுகிறார்:
இதன் பொருள்: “நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.
இந்த துப்புரவு பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்த துப்புரவு பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை.” இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிக தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.
இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
அது இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணையில், ‘ஐ.ஏ.எஸ்.’ என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படியானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படி தரக் குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.
மோடி இப்படியொரு கருத்தை தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007-ல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும் வெளியிட்டது. இதனை தலித் மக்கள் - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள். உடனேயே மோடிக்கு ஆதரவாக சங் பரிவாரங்கள் களத்தில் குதித்தன. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள்.
மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலை தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. நூல் ஒருவேளை திரும்பப் பெறப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது? மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனையாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியீட்டுப் பணியைச் செய்தது. இந்த மொத்த குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்த கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன.
குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத்தளங்களிலும் தலித்களுக்குத் தனி பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். Ram Palia என்று புனிதப்படுத்திக் கூறப்படுகின்றது. குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை ‘வால்மீகி’ என அழைக்கின்றார்கள். இவர்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதை அங்குள்ள வால்மீகிகளில் ஒருவர் இப்படிக் கூறுகின்றார். “நாங்கள் தீண்டத்தகாதவர்கள். எங்களை இங்கே யாரும் தொடுவதில்லை.”
பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்த குவளையில் ஊற்றப்படும். தேனீரை குவளையில் ஊற்றுபவர் அந்த குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவை தருவதில்லை. மாறாக சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனி பாத்திரத்திற்கு குஜராத்தில் ‘ராம் பாத்திரம்’ என்று பெயர்.
அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்றைய நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர் கடைகளில் இப்போது டீயை குடித்து விட்டு தூக்கி வீசிப்படும் அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படுகின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் குஜராத்தின் 22 மாவட்டங்களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.
நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?