ஊரகப் பகுதிகளில் நிறைவேற்றிட வேண்டிய திட்டங்களோடு இணைத்து இந்த வேலை உறுதித் திட்டத்தை நிறைவேற்றினால், அது வேலை வாய்ப்பையும், அதே நேரத்தில் கிராமப் புற மேம்பாட்டையும் உறுதி செய்யும். மாறாக, எந்த திட்ட அடிப்படையும் இன்றி, வறட்சியினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ கிராமப் புறங்களில் வேலையற்ற நிலை ஏற்படும்போது இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மாவட்ட வாரியாக அளித்து, ஒப்புக்கு ஒரு வேலை என்று செய்யச் சொல்லி அன்றாட கூலியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாதது அல்ல.
குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் ஒரு நாள் பணிக்கு ஒருவருக்கு - அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ரூ.100 அன்றாட கூலியாக தர வேண்டும். இது முன்பு நாள் ஒன்றிற்கு ரூ.80 ஆக இருந்தது, பிறகு ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற எவருக்கும் ரூ.100 வழங்கப்பட்டதாக ஒரு இடத்திலும் கூற முடியாது. அரை நாள் வேலை செய்யச் சொல்லிவிட்டு ரூ.40 கொடுத்து அனுப்புவது, அதற்கு முழு நாள் கணக்கு எழுதுவது. முழுநாள் வேலை செய்வோருக்கும் ரூ.60 அல்லது ரூ.70 கொடுத்துவிட்டு, ‘அவ்வளவுதான் ப ோ’ என்று சொல்வது என்பதெல்லாம் மிகக் கண்கூடாக நடந்துகொண்டிருக்கிறது.
இதைத்தான் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிப்படையாகவே, இத்திட்டம் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறினார்.
அதைவிட முக்கியமாக, இத்திட்டத்தை ஊரகப் பகுதிகளில் வேலையில்லாத பருவத்தில் நடைமுறைப்படுத்த வேண்டு்ம என்பது அந்த சட்டத்தின் நோக்கம். ஆனால், விவசாயப் பணிகள் அதிகம் இருக்கும் காலத்தில், விவசாய கூலிகளின் தேவை அதிகம் தேவைப்படும் நாட்களில், அந்த மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் நடக்கும் வேலைக்குச் சென்று, மிக குறைந்த நேரம் உழைத்துவிட்டு ரூ.40 அல்லது ரூ.50 பெற்றுத் திரும்புகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாற்றாக உள்ளது. இதனால் ஒரு பக்கத்தில் விவசாய கூலிகள் இன்றி வேளாண்மை பாதிக்கப்பட, விவசாய கூலிகளோ அரை வேலை செய்துவிட்டு ரூ.40,50 பெற்றுக் கொண்டு திரும்புவது உள்ளூர் பொருளாதாரத்தை முடக்குவதாகவும், கிராம மக்களிடையே பகைமையை ஏற்படுத்துவதாகவும் ஆகியுள்ளது.
இந்தத் திட்டத்தை பயன்படுத்தி, ஒரு காலத்தில் மஸ்டர் ரோல் ஊழல் என்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்றதே, அதைப்போல் பெரும் நிதி கொள்ளை போகிறது. இதனையறிய பெரிய சிபிஐ விசாரணையெல்லாம் வேண்டாம், கிராமப் புறங்களுக்குச் சென்று விசாரித்தாலே போதும், கதை கதையாக கொட்டுகிறார்கள். நமது நாட்டின் ஊடகங்களுக்கும், நாளிதழ்களுக்கும்தான் இத்திட்டம் மகத்தானதே தவிர, உண்மையறிந்த கிராம மக்களுக்கு இதுவும் மற்றொரு ஊழல் திட்டமே.
ஆனால், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலையளிப்பதற்கான அவசியம் என்னவோ எல்லா கிராமத்திலும் உள்ளது. உதாரணத்திற்கு நமது நாட்டின் மாநில அரசுகளின் கீழ் உள்ள பொதுப் பணித் துறை செய்ய வேண்டிய நீர் நிலைகளில் தூர் வாருதல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி ஆற்றின் கரைகளை பலப்படுத்துவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏரிகளை தூர் வாருவது உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. ஆனால் அவைகளை திட்டமிட்டு செய்யும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெயரளவில்தான் உள்ளது. எல்லாவற்றையும் மாவட்ட பஞ்சாயத்தின் துணையுடனும், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடனும் ஆளும் கட்சிக் கூட்டமே அள்ளி சுருட்டிக்கொண்டு போகிறது, இதுதான் உண்மை.
இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நிறைவேற்றப்படவேண்டிய பணிகள் அல்லது திட்டங்கள் என்ன என்பதை அந்தந்த கிராம பஞ்சாயத்திடம் பரிந்துரையாக கோரிப் பெற்று, அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கான நிதியை அளித்து நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் துணை நிற்க வேண்டும். அவ்வாறு திட்டங்களோடு இணைத்து செயல்படுத்தினால் மட்டுமே மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் என்பது கிராமப் புற மக்களுக்கு உறுதியாக 100 நாட்களுக்கான வேலை வாய்ப்பையும், அது உள்ளாட்சி நிர்வாகத்தினால் நிறைவேற்றப்படுவதால் உழைக்கும் மக்களுக்கு முறையாக அன்றாட கூலியான ரூ.100 கிடைக்கும்.
அப்படிச் செய்யாமல் இப்போதுள்ள வழியிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால், சாலை போடாமலேயே சாலை போட்டதாக கணக்குக் காட்டி கொள்ளையடிக்கும் நமது நாட்டின் அரசு நிர்வாகங்கள், வேலை எதையும் தராமலேயே வேலைக்கு அளித்த நிதியை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது என்று கூறி, கிராம (ராம) ராஜ்யத்தை பேசிய மகாத்மா காந்தியின் பெயர் ஊழலிற்கு வழி செய்யும் ஒரு திட்டத்திற்கு இருக்கலாமா?