பண்டக சந்தையில் நடைபெறும் முன் பேர வர்த்தகத்திற்கு வரி விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
பங்குச் சந்தையில் நடைபெறும் வர்த்தகத்திற்கு செக்யூரிட்டி டிரான்செக்சன் டாக்ஸ் என்ற வரி விதிக்கப்படுகிறது. இதே மாதிரி பண்டக சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகத்திற்கும் கமோடிட்டி டிரான்செக்சன் டாக்ஸ் என்ற, பண்டக வர்த்தக வரியை விதிப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்த வரி விதிப்பதால் முன்பேர வர்த்தகத்திற்கு செலவு அதிகரிக்குமா, நீங்கள் இந்த வரியை நீக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா என்று சரத்பவாரிடம் கேட்டதற்கு, இந்த வரி விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தான் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக பவார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பினால் பண்டக முன்பேர சந்தையின் வர்த்ககம் தானாகவே குறைந்து, இறுதியில் முழுவதுமாக நின்று விடும் என்று கூறினார்.
பண்டக சந்தையின் முன்பேர வர்த்தகத்தால் பல பொருட்களின் விலை அதிகரிப்பதாக கூறப்படுகின்றதே என்று பவாரிடம் கேட்டதற்கு, முன்பேர வர்த்தகத்தால் பொருட்களின் விலை அதிகரிப்பதாக அரசு நினைக்கவில்லை.
பண்டக சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. இதை பரிசீலனை செய்வதற்காக அபிஜித் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் அரிசி, கோதுமை உட்பட சில உணவு தானியங்கள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்பட்டது. இந்த தடையால் எந்த பொருளின் விலையும் குறையவில்லை என்று சரத் பவார் கூறினார்.