உள்நாட்டுத் தேவையை ஈடுகட்ட சர்க்கரை இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட தீர்வை விலக்கு இன்றுடன் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை முதல் சர்க்கரை இறக்குமதி மீது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 60 விழுக்காடு தீர்வை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2008-09 சர்க்கரை ஆண்டில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) போதுமான உள்நாட்டு உற்பத்தி இல்லாததால், தேவையை ஈடுகட்ட சர்க்கரை இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த தீர்வையை பூஜ்யமாக்கி உத்தரவிட்டது மத்திய அரசு.
அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மாதத்திற்கு 6 மில்லியன் டன் வரை அயல் நாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது சர்க்கரை உற்பத்தி சாதனை அளவை எட்டவுள்ளதால் சர்க்கரை இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட தீர்வை விலக்கை திரும்பப்பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி, “சர்க்கரை இறக்குமதி மீது அளிக்கப்பட்ட தீர்வை விலக்கு விலக்கிக்கொள்ளப்படுவதால், தீர்வை தொடர்பாக புதிதாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை. முன்பு இருந்த 60 விழுக்காடு தீர்வை தானாகவே நடைமுறைக்கு வரும் என்றே பொருள். தீர்வைய குறைப்பதாக இருந்தால் புதிய அறிவிக்கை அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.