இலக்கியமும் அறிவியலும் கை குலுக்கிக் கொள்ளும் ஊடகம் திரைப்படம்தான். அதில் கதைகளைக் காட்சிப்படுத்துபவர்கள் நடுவே நல்ல கதைகளை மட்டுமே காட்சிப்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருப்பவர் இயக்குநர் கரு. பழனியப்பன். அவர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரிவோம் சந்திப்போம் அவருக்கு நான்காவது படம். தயாரிப்பு ஞானம் பிலிம்ஸ் (பி) லிட்.
இந்தப் படத்தில் வில்லன் இல்லை. வில்லி இல்லை. கதையில் முடிச்சு இல்லை. அடிதடி இல்லை. ஆபாச வசனம் இல்லை. அருவருப்பு காட்சி இல்லை. வெட்டுக்குத்து சண்டை இல்லை. நடனம் இல்லை. கதாபாத்திரங்களில் யாருமே கெட்டவர்களில்லை. எந்த கெட்ட கருத்தும் சொல்லப்படவில்லை. (இப்படி பல இல்லை உண்டு இது காதல் கதையும் இல்லை என்கிற இயக்குநர், வேறு என்னவெல்லாம் உண்டு என்கிறார்?
இது ஒரு குடும்பக் கதை. மக்கள் காதலோடு பார்ப்பார்கள். வெற்றி பெறும் என்றவர் இதில் கதையில் முடிச்சு இல்லை. ஆனால் சுவாரஸ்யம் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் தெளிவாக.
வாழ்க்கை சிக்கலானது. எங்கிருந்தோ யாரோ எதுவுமோ வந்துதான் வாழ்க்கைச் சிக்கலாக வேண்டும் என்று அவசியமில்லை. இதில் எல்லோருமே நல்லவர்கள் தான். நூல் கண்டு தானே சிக்கலாவது போல வாழ்க்கைச் சிக்கலாகிற விதம் சுவாரஸ்யமானதுதான். அது தான் பிரிவோம் சந்திப்போம்.
தாயின் கர்ப்பத்தில் பத்துமாதம் குழந்தை கருக் கொண்டிருப்பதைப் போல பத்து மாதம் நடக்கும் சம்பவங்களே படத்தில் உருக்கொண்டிருக்கின்றன. சினேகாவுக்கு திருமணமாவதற்கு 3 மாதங்கள் முன்பிருந்து தொடங்கும் கதை, மணமாகி 6 மாதங்களுக்குப் பின் வரை செல்கிறது. இதுவே இக்கதையின் பயண தூரம்.
ஒரு குடும்பம் பிரிகிறது. பின் சேர்கிறது. சந்திப்போம் என்று பிரிந்தார்களா? பிரிந்தவர்கள் சந்தித்தார்களா என்று கேள்விக்கு தெளிவாகப் பதில் கிடைக்கும் படத்தில்.
படம் பற்றி இயக்குநரிடம் பல தகவல்களைத் துருவி உங்களுக்கு இங்கே வழங்கியுள்ளோம்.
webdunia photo
WD
இது ஓர் இயல்பான எளிமையான கதையுள்ள படம். சுவாரஸ்யமும் கலகலப்பும் கை கோர்த்த திரைக்கதையமைப்பு. எப்போதும் கதைக்கு மட்டுமே நடிகர்களைத் தேடி நடிக்க வைக்கும் கரு. பழனியப்பன் இதில் சேரன், சினேகா, ஜெயராம் உட்பட 32 முகம் தெரிந்த நடிகர்-நடிகைகளையும் நடிக்க வைத்துள்ளார். படத்தில் சேரன் ஒரு மின்வாரிய செயற்பொறியாளர். சினேகா ஒரு குடும்பத்தலைவி.
இது ஒருவன், ஒருத்தி பற்றிய படமல்ல. நிறைய தோள்கள் இக்கதையை சுமந்துள்ளன. ஒருவர் நாயகராக இருந்து பொறுப்பேற்று நகர்த்திச் செல்ல இது காரோட்டம் அல்ல. தேரோட்டம் ஊர் கூடி இருந்தால் தான் தேரோடும். இது பல நட்சத்திரங்களின் தோள்களில் சுமந்திருக்கும் கதை. இந்த உண்மையை உணர்ந்தே சேரனும் முன்னின்று தோள் கொடுத்த தேராழனாகியிருக்கிறார்.
கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் கதை காரைக்குடி முதல் பொள்ளாச்சி பகுதி வரை பயணிக்கிறது. படப்பிடிப்பு ஹைதராபாத், காரைக்குடி, பொள்ளாச்சி, மூணாறு போன்ற இடங்களில் நடந்துள்ளது. 69 நாட்கள் 79 ரோல்களில் படம் முடிக்கப்பட்டுள்ளது. இது ரீல் அல்ல ரியல்.
ஏராளமானவர்கள் காட்சிகளில் பங்கு பெறுவதால் படப்பிடிப்பு நாட்கள் உயிர்த்துடிப்புடன் உற்சாகமாய் போயிருக்கின்றன. வெளியூர்களில் படப்பிடிப்பில் தினம் தோறும் களேபரம், கலவரம் என்று கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்திருக்கிறது. நடித்தவர்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் கூட்டம் என படப்பிடிப்புத் தலங்கள், புண்ணியத் தலங்கள் போல உற்சாகம் கரை புரண்டு தீபாவளி கொண்டாடிய சந்தோஷம் களை கட்டியிருக்கிறது.
6 பாடல்களுமே தேனாறு. யாரும் கையாளாத மொழியிலக்கணத்தில் பாடல்கள் உருவாகியுள்ளன. இசை வித்யாசாகர்.
தமிழிலக்கணத்தில் வரும் அடுக்குத் தொடர், அந்தாதி, சங்கீர அணி, தன்மையணி, உவமை அணி ஆகியவற்றை பாடல்களில் கையாண்டுள்ளது புதுமையான இனிமை முயற்சி.
சினிமா இயல்பு மீறும் இடங்கள் இரண்டு. ஒன்று பாடல் காட்சிகள், மற்றொன்று சண்டைக்காட்சிகள். இதில் சண்டைக் காட்சியே இல்லை. பாடல் காட்சிகளில் ஒரு பாடல் தவிர எதிலும் நட்சத்திரங்கள் வாயசைக்கவில்லை. எனவே, இயக்குநர் இயல்புக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறார்.
பார்த்திபன் கனவுக்க சினேகாவை டப்பிங் பேச வைத்தவர், இப்படத்திலும் சொந்தக் குரலில் பேச வைத்துள்ளது சிறப்பு. அதுமட்டுமல்ல இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின் திருமணம் குழந்தைகள் என்று போய்விட்ட பின்னாலும் கூட தனக்குப் பிடித்த ஐந்து படங்கள் எது என்று சினேகா சொல்லும்போது பிரிவோம் சந்திப்போம் முதலில், பார்த்திபன் கனவு இரண்டாவது என்று கூறும் அளவிற்கு நடிப்பில் பிய்த்து உதறியிருக்கிறார்.
இந்த படம் பொங்கலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறது. மகிழ்ச்சியுடன் கூறிய இருக்குநர் கரு. பழனியப்பன், தயாரிப்பாளர் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். பணத்தை வைத்து மேலும் பணம் பண்ண வேண்டும் என்பவர்கள் மத்தியில் பணத்தை வைத்து நல்ல படம் பண்ண வேண்டும் என்றவர்கள் இவர்கள். நல்ல தரமான படம் செய்வதே கொள்கை என்று வந்திருக்கும் அவர்களின் ரசனைக்குத் தலை வணங்குகிறேன் என்கிறார்.
நடிகர்-நடிகையர் : சேரன், சினேகா, ஜெயராம், மீசை முருகேசன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : கரு.பழனியப்பன் இசை : வித்யாசாகர் ஒளிப்பதிவு : எம்.எஸ். பிரபு படத்தொகுப்பு : சரவணா கலை : ராஜீவன் பாடல்கள் : கபிலன், யுகபாரதி, ஜெயந்தா நிழற்படம் : விஜய் தயாரிப்பு நிர்வாகம் : எம். காசிலிங்கம், பி. ராமமூர்த்தி மக்கள் தொடர்பு : வி.கே. சுந்தர் நிர்வாகத் தயாரிப்பு : வி. செய்தில் குமார் தயாரிப்பு : எம். சுபாஸ்கரன், ராஜுமகாலிங்கம ்