Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்

saddam hussein
, திங்கள், 20 மார்ச் 2023 (23:36 IST)
2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின.
 
இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க மறுத்து விட்டன.
 
படையெடுப்பை அமெரிக்கா விரும்பியது ஏன்?
 
1990-1991 வளைகுடா போரில், அமெரிக்கா ஒரு பன்னாட்டு கூட்டணிக்குத் தலைமை ஏற்று நடத்தியது. இது இராக் படைகளைக் குவைத்திலிருந்து வெளியேற்றியது.
 
பின்னர், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 687ஐ நிறைவேற்றி, இராக்கின் அனைத்துப் பேரழிவு ஆயுதங்களையும் (WMDs) அழிக்க உத்தரவிட்டது - பேரழிவு ஆயுதங்கள் என்பது அணு, உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள உள்ளடக்கியது.
 
1998 இல், இராக் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களுடனான ஒத்துழைப்பை நிறுத்திய பின், அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழி தாக்குதல்களால் பதிலடி கொடுத்தன.
 
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய 11 செப்டம்பர் 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் இராக் மீது படையெடுப்பதற்கான திட்டங்களைத் தொடங்கியது.
 
சதாம் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களைச் சேமித்து தயாரித்து வருவதாகவும், இரான் மற்றும் வட கொரியாவுடன் ஒரு சர்வதேச "தீய சக்திகளின்” ஒரு பகுதியாக இராக் இருப்பதாகவும் அதிபர் புஷ் கூறினார்.
 
 
அக்டோபர் 2002இல், அமெரிக்க நாடாளுமன்றம் இராக்கிற்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதித்தது.
 
"இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருப்பதாக வாஷிங்டனில் உள்ள பலர் நம்பினர். அது உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது" என்று லண்டனில் உள்ள சதம் ஹவுஸில் ஒரு வெளிநாட்டு விவகார சிந்தனைக் குழுவின் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் அமெரிக்கா செயல்முறைத் திட்டத்தின் இயக்கநர் டாக்டர் லெஸ்லி விஞ்சமுரி கூறுகிறார்.
 
பிப்ரவரி 2003இல், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான கொலின் பவல், இராக்கிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொண்டார். அந்நாடு, அதன் பேரழிவு ஆயுத திட்டத்தால் முந்தைய தீர்மானங்களை மீறுவதாக குற்றம்சாட்டினார்.
 
ஆனால், அவர் சபையை வற்புறுத்தவில்லை. 2002 இல் இராக்கிற்குச் சென்ற ஐ.நா மற்றும் சர்வதேச எரிசக்தி ஆணையத்தின் ஆயுத ஆய்வாளர்களில் பெரும்பாலானோர், பேரழிவு ஆயுதங்களின் ஆதாரங்களைக் கண்டறிய முனைய விரும்பினர்.
 
ஆய்வாளர்கள் அறிக்கைக்காகக் காத்திருக்கப் போவதில்லை என்று கூறிய அமெரிக்கா, இராக்கிற்கு எதிராக "விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை" கூட்டியது.
 
போரை ஆதரித்த நாடுகள்
கூட்டணியில் இருந்த 30 நாடுகளில், பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலந்து ஆகியவை படையெடுப்பில் பங்கேற்றன. பிரிட்டன் 45,000 துருப்புகளையும், ஆஸ்திரேலியா 2,000 துருப்புகளையும், போலாந்து 194 சிறப்புப் படை உறுப்பினர்களையும் அனுப்பின.
 
குவைத் தனது எல்லையில் இருந்து படையெடுப்பை நடத்த அனுமதித்தது.
 
"வில்னியஸ் குழுவில்" உள்ள பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, ஸ்பெயினும் இத்தாலியும் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கு ராஜீய ஆதரவை அளித்தன.
 
இராக் ஒரு பேரழிவு ஆயுதத் திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும், ஐநா தீர்மானங்களை மீறுவதாகவும் அந்த நாடுகள் அனைத்தும் நம்பின.
 
அமெரிக்காவும் பிரிட்டனும் சுமத்திய குற்றச்சாட்டுகள்
இராக்கில் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான "மொபைல் ஆய்வகங்கள்" இருப்பதாக 2003ஆம் ஆண்டு ஐ.நா.விடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் தெரிவித்தார். இருப்பினும், 2004 ஆம் ஆண்டில், இதற்கான ஆதாரம் " திடமாக இல்லை" என்று ஒப்புக்கொண்டார்.
 
கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள இங்கிலாந்து இலக்குகளைத் தாக்க 45 நிமிடங்களுக்குள் இராக்கிய ஏவுகணைகள் தயார் செய்யப்படலாம் என்று பிரிட்டன் அரசாங்கம் ஒரு உளவுத்துறை ஆவணத்தை வெளியிட்டது.
 
பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டோனி ப்ளேர், சந்தேகத்துக்கு இடமின்றி சதாம் ஹுசேன் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கிறார் என்று கூறினார்.
 
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல்
 
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல்
 
இராக்கின் WMD திட்டத்தைப் பற்றி தங்களுக்கு நேரடியாகத் தெரியும் என்று கூறிய ரஃபித் அஹ்மத் அல்வான் அல்-ஜனாபி என்ற ரசாயன பொறியாளர் மற்றும் மேஜ் முஹம்மது ஹரித் என்ற உளவுத்துறை அதிகாரி ஆகிய இரு இராக்கியர்களின் கூற்றுகளை இரு நாடுகளும் பெரிதும் நம்பி இருந்தன. வேண்டும் என்றே ஆதாரங்களை இட்டுக்கட்டியதாக அந்த இருவரும் பின்னர் கூறினர்.
 
போரை ஆதரிக்க மறுத்த நாடுகள்
அமெரிக்காவின் இரண்டு அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ இதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன.
 
ஐரோப்பாவில் இரண்டு முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் ஆதரவை மறுத்தன.
 
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் தி வில்பின், ராணுவ தலையீடுதான் "மோசமான தீர்வாக இருக்கும்" என்றார்.
 
துருக்கி - சக நேட்டோ உறுப்பினர் மற்றும் இராக்கின் அண்டை நாடு - அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளை அதன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்தது.
 
1990-91 வளைகுடா போரில் இராக்கிற்கு எதிராக அமெரிக்காவை ஆதரித்த செளதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் 2003இல் அதன் படையெடுப்பை ஆதரிக்கவில்லை.
 
லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணரான பேராசிரியர் கில்பர்ட் அச்சார், "வளைகுடா அரபு நாடுகள் இந்த திட்டத்தை முட்டாள்தனம் என்று நினைத்தன. "சதாமின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இரான் இராக்கை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்று அவர்கள் கவலைப்பட்டன," என்கிறார்.
 
 
20 மார்ச் 2003 அன்று விடியற்காலையில், ஆபரேஷன் இராக்கி ஃப்ரீடம், 2,95,000 அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் படைகள் குவைத்துடனான இராக் எல்லை வழியாக இராக்கை ஆக்கிரமித்தன.
 
குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகளின் 70,000 உறுப்பினர்கள் நாட்டின் வடக்கில் இராக் படைகளுடன் போரிட்டனர். மே மாதத்திற்குள், இராக்கின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டு அதன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் ஹுசேன் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
 
இருப்பினும், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
2004இல், நாட்டில் ஒரு மதவாத கிளர்ச்சி சூழ்ந்தது. பிந்தைய ஆண்டுகளில், இராக்கின் சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. அமெரிக்க துருப்புக்கள் இராக்கில் இருந்து 2011இல் தான் வெளியேறின.
 
2003 மற்றும் 2011 க்கு இடையில் 4,61,000 பேர் இராக்கில் போர் தொடர்பான காரணங்களால் இறந்ததாகவும், போருக்கு 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கரின் வான் ஹிப்பல் கூறுகையில், "இந்தப் போரினால் அமெரிக்கா நிறைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
 
"இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் ஏன் அமெரிக்க உளவுத்துறையை நம்ப வேண்டும் என மக்கள் சொல்வதை நீங்கள் இன்னும் கேட்கலாம்,” என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு பட்ஜெட்டிற்கு கரூர் திருக்குறள் பேரவை பாராட்டு