Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசுரன் படத்துக்கு தேசிய விருது - வெற்றிமாறன், தனுஷ் படம் குறித்த 15 சுவாரசிய தகவல்கள்

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (17:36 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்த அசுரன் திரைப்படத்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் தனுஷ். ஏற்கனவே 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார் தனுஷ்.
 
அந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.
 
1.பூமணியின் வெக்கை நாவல்தான் அசுரன் படமாகிறது என தகவல் வெளியான போது, அனைவருக்கும் ஒரு விதமான சந்தேகம் இருந்தது. அந்த கதை முழுக்க முழுக்க சிறுவனை மையப்படுத்தி நகரும். இதில் எப்படி தனுஷ் என நினைத்த போது, சிவசாமியை பிரதானமாக்கி சினிமா மொழியில் கதையை மொழியாக்கம் செய்திருந்தார் வெற்றிமாறன்.
 
2.சினிமா குறித்த ஓர் உரையாடலில் இந்த படம் குறித்து வெற்றிமாறன் பேசிய விஷயம் அடர்த்தியானது. "அசுரன் என்று வார்த்தை இப்போது வேறொரு பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. அது நம் பார்வையில், புரிதலில் உள்ள பிரச்சனை. நாம்தான் அசுரர்கள்," என 2000 வருட அரசியலை போகிற போக்கில் விவரித்து சென்றார் வெற்றிமாறன்.
 
3.தலித் நாயகன் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த படத்திற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் வந்தன. சாதிய ரீதியாக மிரட்டல்களையும் சந்தித்தார் வெற்றிமாறன். குறிப்பாக இந்த படத்தில் நடித்த கென்னின் தந்தையே இந்த படத்திற்கு எதிராக சீறினார். கென், நகைச்சுவை நடிகரும் முக்காலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸின் மகன்.
 
4.1968இல் 44 தலித்துகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணி படுகொலைகளை நினைவூட்டும் வகையில் காட்சிகளும் சில வசனங்களும் இந்தப் படத்தில் இருந்தது அதற்கு காரணமாக இருந்தது.
 
5.இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் பாத்திரப்படைப்பு கீழத்தஞ்சை விவசாய போராளி பி.சீனிவாசராவை நினைவு படுத்தியதாக பலர் கூறினார்.
 
6.தலித் நாயகன் பாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் குறித்த விவாதத்தை இந்திய அளவில் அசுரன் படம் உருவாக்கியது. அந்த சமயத்தில் பல ஆங்கில ஊடகங்களும் இது குறித்து கட்டுரை வெளியிட்டன.
 
7.வெற்றிமாறன் குறைந்தநாட்களில் உருவாக்கிய படம் அசுரன். இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் தாணுதான் என அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
 
8.விசாரணைக்கு அடுத்து ஒரு நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் இது. விசாரணை லாக்கப் நாவலின் தழுவல். அடுத்து அவர் இயக்கும்படமும் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவியதுதான்.
 
9.தனுஷின் 38வது படம் அசுரன், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அடுத்து இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்த நான்காவது படம் இது.
 
10.அசுரன் படத்தின் டப்பிங்கின் போது உடல்நலக்கோளாறால் அவதி உற்றார் வெற்றிமாறன். இந்த படத்தின் டப்பிங்கில் உதவியது இயக்குநர் மாரி செல்வராஜும், இயக்குநர் சுகாவும்தான். படத்தின் வசனத்திலும் இவர்களுக்கு பங்கு உண்டு.
 
11.இந்த படத்தின் இசை ஜீ.வி. பிரகாஷ். இந்த படத்துடன் ரீலிஸானது ஜீவி நடித்த '100 சதவீத காதல்' திரைப்படம்.
 
12.வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு. இந்த படத்தில் சிறு வேடத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
 
13.படங்களை பெரிதாக ஒப்புக் கொள்ளாமல் இருந்த பசுபதி, வெகுநாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
 
14.திரையரங்க வசூல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் ஆடியோ உரிமம் என அனைத்தும் சேர்த்து அசுரன் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்தது என்று சினிமா வசூல் நிலவரத்தை பின்தொடரும் நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.தனுஷ் நடித்த 'ராஞ்சனா' இந்தி படம் ஏற்கனவே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்தது.
 
15.அசுரன் கதையின் அடிப்படையான 'வெக்கை' நாவலை எழுதிய பூமணி, தனது அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments