அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கப் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவிகிதம் வரை வரிகளை விதித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்கான $12 பில்லியன் நிவாரணத் தொகையை விடுவித்த வட்டமேசை கூட்டத்தில் பேசிய டிரம்ப், "இந்தியாவிலிருந்து அமெரிக்க சந்தையில் கொட்டப்படும் அரிசியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். இதனால், வரிகள் தொடரலாம்" என சூசகமாக தெரிவித்தார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்ததும், அதை தொடர்ந்து "எந்த நாடுகளில் எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை" என்று ரஷ்யா அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது வர்த்தகப் பிரச்சனை மட்டுமின்றி, இந்தியா-ரஷ்யா உறவுகளின் பின்னணியில் அமெரிக்காவின் ஒரு வகையான வர்த்தக நெருக்குதலாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.