நேபாள அரசாங்கம் சமீபத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை நீக்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவு, நாடு முழுவதும் இளைஞர்களின் தலைமையில் நடந்த தீவிர போராட்டங்களுக்குக்கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா தலைமையிலான அரசு, நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 4 ஆம் தேதி இந்த வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, 'Gen Z' தலைமுறையினர் இந்த தடையை எதிர்த்து, "ஊழலை ஒழியுங்கள், சமூக வலைதளங்களை ஒழிக்காதீர்கள்" என முழக்கமிட்டு தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதால் 19 பேர் வரை உயிரிழந்தனர்.
நிலைமை கைமீறி சென்றதால், நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த நேபாள அரசாங்கம், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்க முடிவெடுத்தது.