அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் உரையின் பகுதிகளை பயன்படுத்தி வெளியான விளம்பரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கனடா பிரதமர் மார்க் கார்னி மன்னிப்புக் கோரியுள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்ததற்கு பதிலடியாக, ஒன்டாரியோ மாகாணம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் கனடாவுக்கு ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டும் விதமாக, அந்த விளம்பரத்தில் ரீகன் 1987-ஆம் ஆண்டு ஆற்றிய உரையின் சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த விளம்பரத்தால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாகவும், மேலும் வரியை அதிகரிக்க போவதாகவும் அறிவித்தார்.
அத்துடன், மார்க் கார்னியை சந்திக்கவும் விருப்பமில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த வர்த்தக பதற்றத்தைத் தணிக்கும் விதமாக பிரதமர் மார்க் கார்னி செயல்பட்டார். தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியா பசுபிக் மாநாட்டின்போது, தென் கொரிய அதிபர் அளித்த விருந்தில் டிரம்ப்பை சந்தித்த கார்னி, இந்த விளம்பரத்துக்காக அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.