இங்கிலாந்தில், கால்பந்து மைதானம் ஒன்றின் கழிப்பறையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு போட்டி நடந்துகொண்டிருந்த போது, அதை பார்க்க 29 வயதான சார்லோட் ராபின்சன் என்ற பெண் சென்றிருந்தார். இந்த நிலையில் ராபின்சனுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட, அவர் கழிப்பறைக்கு விரைந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரசவ வலி என்பதை உணர்ந்த அவர், குழந்தையின் தலை வெளிவருவதைக் கண்டார்.
தான் 29 வார கர்ப்பிணியாக இருந்தபோதிலும், ராபின்சனுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. வயிற்றில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை, குழந்தையின் அசைவையும் அவர் உணரவில்லை. இடுப்பு வலி ஏற்பட்டபோது, அது முந்தைய பிரசவத்தின் காரணமாக இருக்கும் என நினைத்துள்ளார்.
குழந்தை பிறந்த பிறகு, சிக்னல் இல்லாததால் தனது கணவர் மகாலே மற்றும் மாமியார் மிராண்டாவை தொடர்புகொள்ள ராபின்சன் சிரமப்பட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இல்லாத ஒரு துணை மருத்துவர் உதவிக்கு வந்து, அவசர ஊர்தி வரும்வரை தாய் மற்றும் சேய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.