இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.
இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.
தற்போது மகேஷ் பாபுவை வைத்து 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜமௌலி மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தை என சொல்லப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறாக அந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க, அமீர்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த திரைக்கதையில் திருப்தி கிடைக்காததால் அவர்கள் அதை படமாக்கும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளனர். அதனால் ராஜமௌலி ஜூனியர் என் டி ஆர் கூட்டணியில் அந்த படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.