நடிகை சமந்தாவுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் நிதிமோருக்கும் இடையேயான திருமணம், இன்று காலை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமணம் 'பூதசுத்தி விவாஹா' என்ற தனித்துவமான பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
'பூதசுத்தி விவாஹா' என்பது, யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடத்தப்படும் ஒரு திருமண சடங்காகும். இதன் மூலம், தம்பதியரின் பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே ஆழமான பிணைப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த செயல்முறை, தம்பதியர் எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த முறையில் திருமணம் செய்யும் ஜோடிகள் நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
திருமணம் குறித்து ஈஷா அறக்கட்டளை, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தேவியின் அருளும் பேரானந்தமும் அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கப் பிரார்த்தனை செய்துள்ளது.