அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து பல அதிரடிகளை உத்தரவுகளை விதித்துள்ளார். அதில் முக்கியமானதாக வரிகளை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பிற நாடுகளின் பொருட்களுக்குத் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார். இது சம்மந்தமாக அவருக்குக் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அவர் தற்போது வரிக் கிடுக்குப்பிடியை சினிமாத்துறையை நோக்கித் திருப்பியுள்ளார். சமீபத்தில் அவரின் எக்ஸ் தளப் பதிவில் “ஒரு குழந்தையிடம் மிட்டாயைத் திருடுவதைப் போல நம்மிடம் இருந்து மற்ற நாடுகளால் நமது சினிமா தயாரிப்புத் தொழில் திருடப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியாவை ஆளும் திறனற்ற ஆளுநரால் நாம் கடுமையாக தாக்கப்படுகிறோம்.
நீண்டகாலமாக முடிவுறாமல் தொடரும் இந்த பிரச்சனையைத் தீர்க்க, அமெரிக்காவுக்கு வெளியேத் தயாரிக்கப்படும் படங்களுக்கு நான் 100 சதவீத வரியை விதிப்பேன். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. திரும்பவும் அமெரிக்காவை சிறந்த நாடாக ஆக்குவோம்” எனக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் அறிவிப்பால் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது.