இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த டீசரில் ஒரு பதின் பருவ பெண்ணின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் சார்ந்த காட்சிகள் பலவற்றைக் காட்டியிருந்தனர். அதில் அந்த பெண் புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் கண்டனங்கள் எழுந்தன.
இந்த டீசரைப் பாராட்டிய விஜய் சேதுபதி, பா ரஞ்சித் ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் வெளியாகின. இதையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் கருத்துகள் எழுந்தன. இதையடுத்து அந்த படத்துக்கு மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்கள் ஆதரவாகப் பேசினர். இந்நிலையில் இந்த படம் பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு சென்று போட்டியிட்டது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் பற்றி நடந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்துள்ள உத்தரவில் பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கவேண்டும் எனக் கூறி, மேலும் இதுபோன்ற ஆபாசக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.