இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பாக, அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்களும், அபிஷேக் ஷர்மா 28 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 18.2 ஓவர்களிலேயே 119 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் மட்டும் 30 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்.
இந்தியத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சார் படேல் மற்றும் சிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.