கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற சோகம் ஆறுவதற்குள் அர்ஜென்டினாவை இன்னொரு பொருளாதார சுனாமி தாக்கியுள்ளது. இது தானாகத் தேடிப்போய் வரவழைத்துக்கொண்ட சிக்கல் என்பதுதான் இதில் சோகமான விஷயமே.
2001ஆம் ஆண்டு அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வேலையற்றோர் சதவிகிதம் 20% ஆக உயர்ந்தது. அன்னிய செலாவணி நெருக்கடியில் நாடு சிக்கியது. வெளிநாட்டுக் கடன் நூறு பில்லியன் டாலர் என்ற அளவைத் தாண்டியதும் அர்ஜென்டினா அரசு தான் திவாலானதாக அறிவித்தது. தனிநபர் திவால் ஆனால் சொத்துகளைப் பறிமுதல் செய்து கடனை அடைக்கலாம். நாடுகள் திவால் ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஐ.எம்.எப், உலக வங்கி மாதிரி அமைப்புகளிடம் பேரம் பேசி, பொருளாதாரச் சீர்திருத்தம் செய்து, கடனைக் கட்டுவதுதான் நாடுகளுக்கு இருக்கும் வழி. ஆனால் அர்ஜென்டினா அரசு அப்படிச் செய்யாமல் "நூறு பில்லியன் டாலர் கடனைக் கட்ட மாட்டோம். செய்வதைச் செய்துகொள்ளுங்கள்" எனச் சொல்லிவிட்டது.
அதன்பின் அர்ஜென்டினாவுக்குக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள் எல்லாம் சேர்ந்து அர்ஜென்டினாவை உலக நிதிச் சந்தையில் முடக்கி வைத்தார்கள். புதிதாக எந்த நிதி நிறுவனமும், அரசும் அர்ஜென்டினாவுக்குக் கடனைக் கொடுக்க மறுத்தது. நிதி நெருக்கடியில் ஐந்து ஆண்டுகள் தள்ளாடிய அர்ஜென்டினா, கடன்காரர்களை அழைத்து "பழைய கடனில் 35% கொடுக்கிறோம். அதையும் பத்து வருடங்களில் கொஞ்சம், கொஞ்சமாகத் திருப்பிக் கொடுப்போம். 65% கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்தது.
கடன் கொடுத்தவர்களில் 93% பேர் அதற்கு ஒப்புகொண்டு புதிய கடன் பத்திரங்களைப் பெற்றுகொண்டார்கள். ஆனால் 7% பேர் விடாபிடியாக "எங்களுக்கு முழுத் தொகையும் வட்டியோடு வேண்டும்" எனக் கேட்டார்கள். அவர்களுக்கு அத்தொகையைக் கொடுக்கமாட்டேன் என அர்ஜென்டினா அரசு மறுத்துவிட்டது. இந்த 7% பேரும் மிகப் பெரும் நிதி நிறுவனங்கள். வழக்கு தொடர்ந்து முழுத் தொகையையும் பெறமுடியும் என நம்பினார்கள். அவர்களுள் ஒருவர் தான், கந்து வட்டி வசூல் நிதி நிறுவன அதிபர் பால் சிங்கர் (Paul Singer).
கொடுத்த கடனை வசூலிக்க இவர்கள் மிக வித்தியாசமான உத்திகளைப் பயன்படுத்தினார்கள். உலகெங்கும் தேடித் தேடி, அர்ஜென்டினாவின் சொத்துகள் எங்கே உள்ளன எனப் பார்த்து வழக்குத் தொடர்ந்தார்கள். உதாரணமாக கானா நாட்டில் அர்ஜென்டினா அரசின் கப்பல் ஒன்று நின்றுகொண்டிருந்தது. கானா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்தக் கப்பலை ஜப்தி செய்தார்கள். அர்ஜென்டினா அதிபர் இதற்குப் பயந்து வெளிநாடுகளுக்குச் செல்கையில் அரசு விமானத்தில் செல்லாமல் தனியார் விமானத்தில் பர்ஸ்ட் கிளாஸில் பயணம் செய்து வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தச் சூழலில் நியூயார்க் சந்தை மூலம் அர்ஜென்டினா அரசு அந்த 93% பேருக்கும் வட்டி மற்றும் அசலை தவணை முறையில் செலுத்தி வருவது தெரிய வந்ததும், நிதி நிறுவனங்கள் அர்ஜென்டினா அரசு மேல் நியூயார்க் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன. "எங்களுக்குச் சேரவேண்டிய 15 பில்லியன் டாலரை அர்ஜென்டினா அரசு முழுமையாகச் செட்டில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நியூயார்க் வங்கிகளைப் பயன்படுத்தி அந்த 93% கடன்காரர்களுக்குச் செலுத்தும் தொகையை நிறுத்தி வைக்கவேண்டும்" என வழக்குத் தொடர்ந்தார்கள்.
நியூயார்க் கோர்ட்டும் அதை ஏற்று உத்தரவிட்டது. அர்ஜென்டினா அரசு, சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றும் வழக்கு, கடன் கொடுத்தவர்களுக்குச் சாதகமாக முடிந்தது. நியூயார்க் சந்தையில் செல்லுபடி ஆகும் கடன் பத்திரங்களை அர்ஜென்டினா அரசு வழங்கி இருந்ததால் ஒன்று 15 பில்லியனைக் கொடுக்க வேண்டும் அல்லது மறுபடி திவால் ஆகவேண்டும் என்ற நிலை உருவானது.
இந்தச் சூழலில் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த நிதி நிறுவனங்களுக்கு ஏதோ இன்னும் கொஞ்சம் தொகையைக் கொடுத்து செட்டில் செய்திருக்கலாம். ஆனால் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் (Cristina Kirchner) "அந்தப் பிணம்தின்னி கழுகு நிதி நிறுவனங்களுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் கிடையாது" என அறிவித்து, திவால் ஆகும் ஆப்ஷனைத் தேர்வு செய்தார்.
இப்போது:
100% தொகையைக் குறிவைத்த நிதி நிறுவனங்கள், ஒரு பைசா கூட இதுவரை கிடைக்காமல் இனியும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அர்ஜென்டினாவைப் பணியவைக்க முடியுமா அல்லது அர்ஜென்டினா அரசு கொடுக்கும் 35% பணத்தைப் பெற்றுக்கொள்வதா என முடிவு செய்ய வேண்டும்
அர்ஜென்டினா அரசு தொடர்ந்து திவாலில் இருப்பதா? அல்லது பேச்சு வார்த்தையைத் துவக்கி ஏதோ கொஞ்சம் அதிகத் தொகையைக் கொடுத்து செட்டில் செய்ய முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இப்படி மிக சுவாரசியமான கிளைமாக்ஸை நோக்கி இந்தக் கடன் விவகாரம் செல்ல, நடுவே அர்ஜென்டினா பொருளாதாரம் தள்ளாடி நிற்கிறது. 35% தொகைக்கு ஒப்புக்கொண்ட 93% கடன் கொடுத்தவர்கள் அத்தொகையும் கிடைக்காமல் திண்டாடி நிற்கிறார்கள். ஆகப் பெரும் நிதி நிறுவனங்களுக்கும், அர்ஜென்டினாவுக்கும் இடையே நடக்கும் இப்போரில் பாதிக்கப்படுவோர், அர்ஜென்டினா மக்களும் சிறு முதலீட்டாளர்களுமே!!