விந்தை உலகம் 1 - மகளை இளவரசி ஆக்கிய தந்தை
அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா மாநிலத்தில் ஜெரமையா ஹீட்டன் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு இளவரசி கதைகள் மிகப் பிடிக்கும். ஒரு நாள் "நானும் இளவரசி ஆக முடியுமா அப்பா?" எனத் தந்தையிடம் கேட்டார்.
அதை ரொம்ப சீரியசாக யோசித்துப் பார்த்த ஜெரெமையா, இணையத்தில் தேடியதில் எகிப்துக்கும் சூடானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிர் தாவில் (Bir Tawil) எனும் பெயரில் சுமார் 800 சதுர கி.மீ. நிலம், இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாமல் அனாதையாக இருப்பது தெரிய வந்தது.
மேப் வரைகையில், எல்லைப் பகுதி ஒப்பந்தங்கள் போடுகையில் இம்மாதிரி சில இடங்கள் விட்டுப் போவது உண்டு. இந்தியா - பாகிஸ்தான் இடையே இம்மாதிரி மேப் வரைகையில் விட்டு போன சியாச்சின் பகுதிக்கு இரு நாடுகளும் பின்னாளில் போரிட்டது வரலாறு. அதே போல் ஒப்பந்தம் போடுகையில் பிர் தாவிலும் விட்டுப் போய்விட்டது. புல்பூண்டு கூட முளைக்காத மலைப் பகுதி என்பதால் அங்கே மக்கள் யாரும் வசிக்கவில்லை.
உடனே எகிப்து விசா வாங்கி, கிளம்பிப் போய் பிர் தாவிலில் இறங்கி "அது எனக்கே சொந்தம்" எனச் சொல்லி, தன் உருவப் படம் பொறித்த கொடியையும் நாட்டிவிட்டு பிர் தாவில் பகுதிக்குத் தன் மகள் எமிலியை "இளவரசி எமிலி" ஆக அறிவித்தார் ஜெரெமையா.
சட்டப்படி அதற்கு உரிமை கொண்டாட, இனி ஐநா சபையை அவர் அணுகலாம். ஆனால் அம்மாதிரி சீரியசாகச் செய்யாமல் தன் முகநூல் கணக்கில் மட்டும் பீர் தாவில் படங்களைப் போட்டு தன் மகளை இளவரசியாக்கிய மகிழ்வில் இருக்கிறார் அந்தத் தந்தை.
விந்தை உலகம் 2 - $22க்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம்
இவராவது மகள் மேல் உள்ள அன்பில் இதைச் செய்தார் எனச் சொல்லலாம். ஆனால் அமெரிக்கா, நெவாடா மாநிலத்தில் டென்னிஸ் ஹோப் என்பவர் "நிலவு தூதரக கார்ப்பரேஷன்" எனும் கம்பனியைத் துவக்கி நிலவில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வருகிறார். நெவாடா சட்டபடி "புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஒருவர் குடியேற எண்ணியதை நிரூபித்தால் அந்த இடம் அவருக்குச் சொந்தம்" என ஆகும். இதைக் காரணம் காட்டி நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை $22க்கு விற்று வருகிறார். படித்தால் நமக்கு இது ஜோக் மாதிரி தோன்றலாம். ஆனால் இதில் இதுவரை சுமார் 30 லட்சம் டாலர் சம்பாதித்துள்ளார். ஏக்கர் நிலம் $22 தானே எனச் சொல்லி பலரும் பல ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.
ஆனால் நிலவு யாருக்குச் சொந்தம் என்பதில் பெரும் சர்ச்சை ஏற்கெனவே நிலவி வருகிறது. ஐநா சபை ஒப்பந்தபடி 1967இல் சுமார் 100 நாடுகள் விண்வெளி, பிற கிரகங்கள் ஆகியவற்றின் மேல் எந்த நாடும் உரிமை கோருவதில்லை என ஒப்பந்தம் செய்து கையொப்பம் இட்டுள்ளன. ஆனால் 1756ஆம் ஆன்டு பிரஷ்ய மன்னர் பிரெக்ட்ரிக் விளையாட்டாக "நிலவை உனக்குப் பரிசளிக்கிறேன்" எனச் சொல்லி அவுல் ஜுவர்கென் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதைக் காட்டி அவரது வம்சாவழியினர் "நிலவு எங்களுக்கே சொந்தம்" என உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
1997ஆம் ஆண்டில் யேமன் நாட்டவர்கள் மூவர் தம் நாட்டுப் பழங்குடியினர் நம்பிக்கைப்படி செவ்வாய் கிரகம் தமக்கே சொந்தம் என்றும் செவ்வாய் கிரகத்தில் தன் அனுமதி இன்றி விண்கலன்களை அனுப்பியது தவறு என்றும் கூறி நாசா மேல், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது.
ரியல் எஸ்டேட் வணிகம் என்றால் இப்படி பிரச்சனைகள் வருவது சகஜம் தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.