Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? - அன்புமணி கேள்வி!

Advertiesment
Anbumani ramadoss

Prasanth K

, ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (13:35 IST)

இராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யாதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட  அனுமதியை  உடனடியாக  திரும்பப் பெற வேண்டும் என்று  தமிழ்நாடு  மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டிருப்பதாக   திமுக அரசு அறிவித்து இன்றுடன் 15 நாள்கள் ஆகும் நிலையில்  ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி இன்று வரை  திரும்பப்பெறப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை; மாறாக உழவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன்  கிணறுகளை  அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு  தமிழ்நாடு  மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இது குறித்த செய்தி கடந்த  ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முதல் எதிர்ப்புக்குரலை நான் எழுப்பினேன். அதைத் தொடர்ந்து பிற கட்சிகளும், உழவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  எதிராக பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதை அறிந்த  தமிழக அரசு, உடனடியாக இந்த அனுமதியை  திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு  அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.

 

ஹைட்ரோ கார்பன்  கிணறுகளை  அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்  தமிழக அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். தமிழக அரசு ஆணையிட்டால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டியது இந்த ஆணையத்தின் கடமை ஆகும்.  இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால், இது தொடர்பாக தமிழக அரசு  அறிவுறுத்திய நாளிலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான  அனுமதியை ஆணையம் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை ஆணையம் அனுமதியை ரத்து செய்யவில்லை. தமிழக அரசும் இது தொடர்பாக எந்த வினாவும் எழுப்பாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படாத நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை அடுத்த  மாதவனூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கான பணிகளை  ஓ.என்.ஜி.சி நிறுவனம் தொடங்கி விட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள உழவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அப்பணிகளை ஓ.என்.ஜி.சி நிறுத்தியது.  அனுமதி ரத்து செய்யப்படவில்லை என்றால் ஓ.என்.ஜி.சி  நிறுவனம் கிணறு அமைக்கும் பணிகளை  எந்த நேரமும் மீண்டும் தொடங்கக்கூடும். அதனால், உழவர்கள் எந்த நேரமும் ஒருவகையான அச்சம் மற்றும் பதட்டத்திலேயே உள்ளனர்.

 

ஹைட்ரோ கார்பன் விவகாரங்களில் திமுக அரசின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஆணையிட்டதா? என்பதே ஐயமாக உள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திணிப்பது, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தால் உடனடியாக திரும்பப் பெறுவது என்ற உத்தியைத் தான்  திமுக அரசு கடைபிடித்து வருகிறது. 2010-ஆம் ஆண்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை  காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதித்த  திமுக அரசு,  அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன்  ஆய்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக பல்டி அடித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

 

20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  அதன்பின்  இராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டு உழவர்களுக்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்யாமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு  அளிக்கப்பட்டுள்ள அனுமதியை  மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்  நாளைக்குள்  ரத்து செய்வதை  தமிழக அரசு  உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்களின் அரசியல் மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை: தினகரன்