தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு சவாலான தேர்தலாக இருக்கும். ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய். குறிப்பாக திமுக-விற்கு எதிராகத்தான் அவருடைய தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் தவெக கட்சி சார்பாக ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு முதலில் தவெக கட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு காரணம் கரூரில் நடந்த சம்பவம். இருந்தாலும் தவெக கட்சியினர் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்கு அனுமதி கேட்டு மனு அளித்து வந்தனர். ஒரு வழியாக கடும் நிபந்தனைகளுடன் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்தது.
அதற்கேற்ப இன்று புதுச்சேரியில் உள்ள உப்பளம் மைதானத்தில்தான் அந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது. கடுமையான விதிமுறைகளின் கீழ்தான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இருந்தாலும் எப்பவும் போல விஜயை பார்ப்பதற்கு வயதானவர்கள், குழந்தைகள் , பெண்கள் என ஆங்காங்கே காணப்பட்டனர். இந்த நிலையில் தனது வியூகத்தை மாற்றியிருக்கிறார் விஜய்.
எப்பவும் மக்கள் கூட்டத்தில் பிரச்சார வாகனத்தில் விஜய்தான் முதலில் பேசுவார். ஆனால் இன்று புதுச்சேரியில் முதலில் புஸ்ஸீ ஆனந்த், அவரை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா என வரிசையாக பேசிய பிறகுதான் விஜய் தனது பேச்சை தொடர்ந்தார். இது கூட கூட்டத்தின் அமைதியை காப்பதற்கு கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸையும் முதலமைச்சர் ரங்கசாமியையும் விமர்சிக்காமல் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
அதற்கு மாறாக ஒன்றிய அரசையும் திமுக அரசையும் விமர்சித்தே தனது பேச்சை நிறைவு செய்தார் விஜய். புஸ்ஸீ ஆனந்த் பேசும் போது, நாம் எல்லாரும் தளபதியின் குடும்பம். இன்று வேலை நாள்கள்தான். அப்படியிருந்தும் இவ்ளோ பேர் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் தளபதிக்காகத்தான் என கூறினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை தளபதிதான் தனதாக்குவார் என்றும் கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனும் புதுச்சேரியில் காவல்துறையின் செயல்பாட்டை பார்த்து பெருமையாக பேசினார். இந்த நிலையில் கடைசியாக பேசிய விஜய் சரியாக 10 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டார். எப்பவும் போல என் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சை தொடங்கினார் விஜய்.
எடுத்ததுமே ஒன்றிய அரசை விமர்சித்துதான் பேசினார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்த விஷயம், கரூர் சம்பவத்தை பற்றி விஜய் ஏதாவது பேசுவாரா என்பதுதான். அதை பற்றி ஒன்றுமே பேசவில்லை விஜய்.புதுச்சேரி அரசையும் புதுச்சேரியை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி மட்டுமே பேசினார் விஜய். தமிழ்நாட்டுக்காக மட்டும்தான் குரல் கொடுப்பேன் என்று நினைக்காதீர்கள், புதுச்சேரி மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். ஆனால் ஒரு பொதுக்குழு கூட்டத்தை 10 நிமிடத்தில் முடித்ததாக வரலாறே இல்லை. ஆனால் விஜய் சரியாக 10 நிமிடம் மட்டுமே பேசி மக்களுக்கு டாட்டா காட்டி செல்வதை பார்க்க முடிந்தது.