தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அனுமதி மறுக்கப்பட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை சமாளிக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் பங்கேற்கும் முதல் கூட்டமான இது, புதுச்சேரி உப்பளம் துறைமுகத் திடலில் நடைபெற்றது. பாதுகாப்புக்காக 5,000 பேருக்கு மட்டுமே க்யூ.ஆர். குறியீடு உள்ள அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பிரதான நுழைவு வாயிலில், அனுமதி அட்டை இல்லாத ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்து கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீஸார் கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.