தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
இன்று தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவற்றுடன், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கனமழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, கோயம்புத்தூர் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 17 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீண்டும் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.