கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூரில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் எண்ணிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்தார். முதல்வர் 600-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூற, ஏடிஜிபி முன்னர் 500 பேர் என்ற தகவலை அளித்திருந்ததை சுட்டிக்காட்டி, அரசின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாகக் கூறினார்.
மேலும், இந்த பேரழிவுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். முன்னர் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட, குறுகிய மற்றும் அதிக போக்குவரத்து நிறைந்த வேலுச்சாமிபுரம் பகுதியை இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு ஒதுக்கியது, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அரசு திட்டமிட்டதாலேயே நிகழ்ந்தது என்று மக்கள் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான மற்றும் போதுமான பாதுகாப்பை அளிக்க தவறியதாலேயே 41 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.