அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசியில் நடைபெற்ற கட்சி முகவர்கள் கூட்டத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே பலமானவை. வேறு கட்சிகளுக்கு இங்கு வேலையில்லை" என்று ஆவேசமாக கூறினார்.
சமீபத்தில் திறக்கப்பட்ட சிவகாசி ரயில்வே மேம்பாலத்தை குறிப்பிட்டுப் பேசிய அவர், "மத்தியில் எங்கள் ஐயா மோடி இருக்கிறார். எங்கள் டாடிதான் இருக்கிறார். நாங்கள் சொன்னால்தான் ரயில்வே பாலத்துக்கு அனுமதி கொடுப்பார். இந்த திட்டத்திற்கு அ.தி.மு.க.வே பிள்ளையார் சுழி போட்டது" என்று தி.மு.க.வின் உரிமை கொண்டாட்டத்தை மறுத்தார்.
மேலும், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, "காங்கிரஸ் கட்சிக்காரர் இந்த நாட்டுக்கு தேவையில்லை. 3 முறை எம்.பி.யாக இருந்தும் அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
தமிழக மக்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கே முடிவெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.