தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையவுள்ள நிலையில், நவம்பர் 17, அன்று சென்னை உட்பட பல மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 17 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பருவமழை தீவிரமடையும் நிலையில், வட கடலோர மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.