சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் கனமழை காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்தது.
இதன் காரணமாச் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இருப்பினும், மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் மழையால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒரு வீட்டின் மின்விசிறி தீப்பிடித்ததாகவும், இதனை அறிந்த தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களை பாதுகாப்பாக காப்பாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதாகவும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.