Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

Advertiesment
அதிமுக

Mahendran

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (15:41 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசியுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தான் நடத்திய முதல் கட்ட பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகவும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
தான் ஒரு விவசாயி என்பதால், 'காலத்தே பயிர் செய்' என்ற பழமொழிக்கேற்ப, தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், இது அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
 
மேலும், திமுக தனது கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் அதிமுக பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்காது என்றும் அவர் குற்றம்சாட்டினார். 
 
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதையெல்லாம் தாங்கள் மாற்றுவோம் என்றும் பழனிசாமி உறுதியளித்தார்.
 
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருப்பதால் திமுக பயந்துபோய் இருப்பதாகவும், அதனால்தான் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதாக வதந்திகளை பரப்பி வருவதாகவும் பழனிசாமி தெரிவித்தார். இந்த வதந்திகளை மீறி, அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதியுடன் கூறினார். 
 
திமுக பணத்தை வீசி சில கட்சிகளை அடிமையாக வைத்து வெற்றி பெற்றுள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று கேள்வி எழுப்பி சவால் விடுத்தார். 
 
மேலும், திமுகவை தோற்கடிக்க ஒருமித்த கருத்து கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்றும், பல கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டுவதால் விரைவில் வலுவான கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை