கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டது. டாஸ்மார்க் ஒருபக்கம் குற்றச்செயல்களுக்கு காரணமாக இருந்தால் ஒருபக்கம் கஞ்சா புழங்குகிறது. அதுவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இளைஞர்கள் கஞ்சா அருந்திவிட்டு கொலை குற்றங்களை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது காவல்துறை என்னதான் கட்டுப்படுத்தினாலும் குற்றச்செயல்கள் குறையவில்லை.
குறிப்பாக சமீபத்தில் கோவையில் தனது ஆண் நண்பருடன் ஒரு பெண் ஒதுக்கு புறமான இடத்தில் காரில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விரட்டிவிட்டு அந்த பெண்ணை அருகில் இருந்த ஒரு இடத்திற்கு மிரட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அது நடந்து சில நாட்களிலேயே கோவையில் ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண்ணோ இது குடும்ப விவகாரம் என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் பட்டப்பகலில் நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச்செயல்கள் அரங்கேறுவது தொடர்கதை ஆகிவிட்டது. யார் எங்கே எப்போது சடலமாக கிடப்பார்கள் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. குற்றவாளிகளை குஷியாக்கி மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் என தெரிவித்திருக்கிறார்.