Publish Date: Wed, 18 Feb 2026 (10:27 IST)
Updated Date: Wed, 18 Feb 2026 (10:30 IST)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்துவிட்டதால் பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம் பாமகவில் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் அன்புமணியை தனது கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பாமகவுக்கு நான்தான் தலைவர் என ராமதாஸ் சொல்லி வந்தும் எந்த பலனும் இல்லை. ஏனெனில் வருகிற ஆகஸ்ட் மாதம் வரை பாமகவுக்கு அன்புமணிதான் தலைவர் என தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது..
பாமகவுக்கு நான்கு ஆப்சன்கள் இருக்கிறது.. ஒன்று அதிமுக கூட்டணி, அல்லது திமுக கூட்டணி, இல்லையென்றால் தவெக, மூன்றும் இல்லையென்றால் தனித்து போட்டியிட வேண்டும். ஆனால் அதிமுக கூட்டனியில் ஏற்கனவே அன்புமணி இருக்கிறார். திமுகவில் திருமாவளவன் இருப்பதால் அங்கு செல்ல முடியாது. தவெகவும் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, அதிமுக கூட்டணியிலே இணைய முடிவெடுத்த ராமதாஸ் தரப்பு முயற்சி செய்தும் அது நடக்கவில்லை என தெரிகிறது. ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ அருள் கூட்டணி பற்றி பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் அதை பேச முடியாது என சொல்லி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதுக்கு பின்னணியில் முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் அன்புமணி இந்த கூட்டணியில் இருக்கிறார்.. அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்.. அதோடு அன்புமணிக்கு ஏற்கனவே 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. ராமதாஸ் அணியை உள்ளே கொண்டு வந்தால் அவர்களும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்பார்கள். அப்படி கொடுத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும்..
ஒருவேளை அன்புமணியும் ராமதாஸும் சமாதானமாக போய் தொகுதியில் பிரித்துக் கொண்டாலும் கண்டிப்பாக பல வகைகளிலும் சிக்கல் வரும் என பழனிச்சாமி நினைக்கிறாராம்.
எனவே ராமதாஸின் பாமக தனித்துவிடப்பட்டிருக்கிறது. அநேகமாக வரும் தேர்தலில் ராமதாஸ் தரப்பு தனித்துப் போட்டியிடும் எனத்தெரிகிறது. அதோடு அன்புமணி தரப்பு எந்த தொகுதியிலெல்லாம் போட்டியிடுகிறதோ அதே தொகுதிகளில் ராமதாஸ் தரப்பும் போட்டியிட திட்டமிட்டிருக்கிறதாம்..