இலங்கை அருகே தோன்றிய டிட்வா புயல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த புயல் தற்போது நகராமல் ஒரே இடத்தில் நிற்பதால் தான் சென்னைக்கு கனமழை பெய்து கொண்டிருப்பதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினாலும் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும், அடுத்த 12 நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை அருகே ஒரே இடத்தில் புயல் மையம் கொண்டிருப்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கண்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே இடத்தில் நகராமல் டிட்வா புயல் நீடிப்பதால், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை மற்றும் விருதுநகர் பகுதிகளில் இன்று மதியம் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.