திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி தீபம் ஏற்றப்படாததை கண்டித்து, இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் இந்த வழக்கை தொடர்ந்தார். அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே தீபம் ஏற்றப்படவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், நீதிபதி இந்த வாதத்தை ஏற்கவில்லை. தலைமைச் செயலாளர், ஏடிஜிபி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அவர், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர் மனுதாரராகச் சேர்க்கவும், மதுரை காவல்துறை துணை ஆணையர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.